புதுச்சேரியில் மத்திய பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இதன் கிளை காரைக்காலில் உள்ளது. இங்கு பணியாற்றி வரும் பேராசிரியர் ஒருவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாகப் புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாகப் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் மாணவி ஒருவர் அவரது உறவினருக்கு செல்போன் வாயிலாகப் பேசிய ஆடியோ ஒன்று வெளியாகிக் கேட்போர் மனதைப் பதைபதைக்க வைக்கிறது. அதில், “5, 6 மாதமாக ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. இதை மனதிற்குள் வைத்துக்கொண்டு நான் ரொம்ப மன அழுத்த நிலைக்கு போய்விடுகிறேன். என்னால் படிக்க முடியவில்லை. எதிலும் கவனம் செலுத்த முடியவில்லை. ரொம்ப கஷ்டமாக இருக்கிறது.
துறைத் தலைவர் (HOD) பாலியல் ரீதியாகத் தொந்தரவு செய்கிறார். தப்பு தப்பாகப் புகைப்படம் கேட்கிறார். தப்பு தப்பாகப் பேசுகிறார். வெளிப்படையாகவே ஆபாச போட்டோ கேட்டுவிட்டு ஆபீஸ் ரூம் வா என்று சொல்கிறார். நான் உன்னைத் தனிப்பட்ட முறையில் பார்க்க வேண்டும் என்று பேசுகிறார். இதற்கு என்ன பண்றது என்று எனக்குத் தெரியவில்லை. அன்னைக்கு மதியம் அவர் ஒரு ஸ்டேட்டஸ் ஒன்று வைத்திருந்தார். அதில் அவர் புக் வாங்குற மாதிரி ஸ்டேட்டஸ் அதற்கு நான் கங்கிராஜுலேஷன் சார் என்று ஒரு டெக்ஸ்ட் அனுப்பினேன். அதற்கு அவரிடம் இருந்து, ‘தேங்க்யூ சோ மச் டார்லிங்’ அப்படி என்று ஒரு ரிப்ளை வந்தது. எனக்கு அப்போது அது தவறாகத் தெரியவில்லை. ஏனென்றால் ஒருவேளை இப்போது தான் முதுகலை (பிஜி) படிக்கிறோம். இங்கே எல்லாரும் இப்படித்தான் பேசிப்பார்களோ அப்படி என்ற மாதிரி நான் அதனைப் பெரிதாக எடுத்துக்கவில்லை.
அதன் பிறகு மறுநாள் இரவு 10 மணிக்குக் கால் பண்றது. 10 மணிக்கு மேல டெக்ஸ்ட் பண்றது. சில நேரம் நேரடியாகவே எனக்குக் கால் பண்ணி, ‘எனக்கு ஆபாச புகைப்படம் வேண்டும். உனக்கு நான் இன்டர்னல் மார்க் தரேன். எனக்கு போட்டோஸ் அனுப்பவில்லை என்றால் உன் இன்டர்னல் மார்க்கில் கை வைத்துவிடுவேன். உன்னால் எக்ஸாம் எழுத முடியாது. உன்னால் படிக்க முடியாது’ என இது மாதிரியெல்லாம் தப்பு தப்பாகப் பேச ஆரம்பிச்சிட்டார்” எனத் தெரிவித்துள்ளார். அதோடு இளங்கலை, முதுகலை மற்றும் ஆராய்ச்சிப் படிப்பு படிக்கும் மாணவிகளுக்குச் சம்பந்தப்பட்ட பேராசிரியர் பாலியல் தொல்லை கொடுப்பதாகவும் கூறப்படுகிறது.
அதிலும் குறிப்பாகக் கேரள மாநிலத்தைச் சேர்ந்த மாணவிகளுக்கு அதிகளவில் அவர் பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுத்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் புதுச்சேரியின் முன்னாள் கல்வி அமைச்சர் கமலக்கண்ணன் இந்தப் புகார் தொடர்பாக அவர் தெரிவிக்கையில், “மாணவி கூறிய ஆடியோவைப் புகாராக எடுத்துக்கொண்டு காவல்துறையும், பல்கலைக்கழக நிர்வாகமும் நேரடியாக இது குறித்து விசாரணை நடத்திச் சம்பந்தப்பட்ட பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏனென்றால் இது மத்திய பல்கலைக்கழகம் ஆகும். இந்தியா முழுவதும் உள்ள மாணவிகளும், மாணவர்களும் படித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு இது போன்று தொல்லை கொடுத்தால் அது புதுச்சேரிக்கே கெட்ட பெயர் ஏற்படும். அதனால் அரசு இதில் கவனம் செலுத்த வேண்டும்” எனக் கூறியுள்ளார்.