தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தின் சார்பில் தெரிவிக்கையில், “04.12.2025க்குள் நிரப்பப்பட்ட கணக்கீட்டு படிவத்தை வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் ஒப்படைத்தால், அவ்வாக்காளரின் பெயர் 09.12.2025 வெளியிடப்பட உள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறும். 04.12.2025க்குள் கணக்கீட்டு படிவத்தை சமர்ப்பிக்காத பட்சத்தில், அவ்வாக்காளரின் பெயர் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறாது. 3 முறை வீடு தேடி சென்றும் கணக்கீட்டு படிவம் வழங்க முடியாத வாக்காளர்களின் பெயர்கள், வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறாது.
வரைவு வாக்காளர் பட்டியலில் ஒரு வாக்காளரின் பெயர் இல்லையெனில், உரிமைக்கோரல் மற்றும் மறுப்புரை காலத்தில் படிவம் 6 உடன் உறுதிமொழிப் படிவத்தை இணைத்து அவரது பெயரை புதியதாக வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்பிக்கலாம். உரிமை கோரல் மற்றும் மறுப்புரை (Claims and Objections) காலம் 09.12.2025 முதல் 08.01.2026 வரை நடைபெற உள்ளது. இக்காலகட்டத்தில் வாக்காளர்கள் பெயர் சேர்க்க, நீக்க அல்லது வாக்காளர் பட்டியலில் உள்ள பதிவுக்கு அந்த சட்டமன்ற தொகுதியின் வாக்காளர் பட்டியலில் வாக்காளராக பதிவு பெற்றவர் எதிர்ப்பு தெரிவிக்கலாம்.
அறிவிப்புக் கட்டம் (Notice Phase) 09.12.2025 முதல் 31.01.2026 வரை நடைபெறும். இந்த காலகட்டத்தில் வாக்காளரின் தகுதியை ஆய்வு செய்த பிறகு தேவையானால் வாக்காளர் பதிவு அலுவலரால் அவ்வகையான வாக்காளர்களுக்கு அறிவிப்புகள் வழங்கப்பட்டு வெளியிடப்பட்டு விசாரணை நடத்தப்படும். வாக்காளரின் அனைத்து உரிமைகோரல்கள் மற்றும் மறுப்புரையில் பரிசீலிக்கப்பட்ட பின், இறுதி வாக்காளர் பட்டியல் 07.02.2026 அன்று வெளியிடப்படும்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில் தமிழ்நாடு உட்பட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அதற்கான கால நீட்டிப்பை வழங்கி இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/11/30/sir-2025-11-30-13-23-03.jpg)
அதன்படி டிசம்பர் 11ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களின் கடும் எதிர்ப்பை தொடர்ந்து எஸ்ஐஆர் விண்ணப்பங்களை ஒப்படைக்கும் தேதியை தேர்தல் ஆணயம் நீட்டித்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும் வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் மாதம் 16ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனையடுத்து வாக்காளர் இறுதி பட்டியல் பிப்ரவரி 14ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow Us