சென்னை மாநகர் பேருந்துகளில் மின்னணு முறையில் பயணச்சீட்டு வழங்குவதில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் அளித்துள்ள அறிவிப்பில், “சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் பயன்படுத்தப்படும் மின்னணு பயணச்சீட்டு இயந்திரங்களில் (ETM) எதிர்பாராத தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதால், தற்போது மின்னணு பயணச்சீட்டுகளை வழங்குவதில் தற்காலிகத் தடை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக, தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்படும் வரை நடத்துநர்கள் மூலமாக காகிதத்திலான கைமுறை (Manual) பயணச்சீட்டுகள் மட்டுமே வழங்குவார்கள் என்பதைப் பயணிகள் கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இக்காலக்கட்டத்தில் UPI, NCMC கார்டுகள், டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலமான பணப்பரிமாற்றங்களை ஏற்க இயலாது என்பதையும், 'சென்னை ஒன்' (Chennai One App) செயலி தற்காலிகமாகச் செயல்படாது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
பயணிகளுக்கு ஏற்பட்டுள்ள இந்தச் சிரமத்திற்கு வருந்துவதுடன், தொழில்நுட்பக் குழுவினர் இப்பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். பயணிகளின் மேலான ஒத்துழைப்பை நாடுகிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சென்னை ஒன் செயலி வழக்கம்போல் செயல்படுவதாக விளக்கம் அளித்துள்ளது. எனவே பயணிகள் தங்கள் பயணங்களுக்கான டிக்கெட்டை தடையின்றி பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/16/mtc-online-ticket-2026-02-16-08-37-06.jpg)