தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) மூலம் தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பப் போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. அதன்படி குரூப்-1, குரூப்-2, குரூப்-4 உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளைத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது. அந்த வகையில் குரூப்-2 மற்றும் 2 ஏ தேர்வுக்கான அறிவிப்பு கடந்த ஜூலை மாதம் வெளியிடப்பட்டது.
இதற்கான முதல் நிலைத் தேர்வு செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி (29.09.2025) நடைபெற்ற உள்ளது. இந்நிலையில் இந்த தேர்விற்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாகத் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் சண்முக சுந்தரம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை எண் 11/2025, நாள் 15.07.2025ன் வாயிலாக நேரடி நியமனத்திற்கு அறிவிக்கை செய்யப்பட்ட ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளில் (தொகுதி II மற்றும் IIA பணிகள்) அடங்கியுள்ள பதவிகளுக்கான ஒளிக்குறி உணரி வகைத் தேர்வு 28.09.2025 தேதி முற்பகல் நடைபெற உள்ளது.
தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு (Hall Ticket) www.tnpsc.gov.in, web www.inpccxams.in. பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவு தளத்தின் (OTR DASHBOARD) மூலமாக மட்டுமே விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து தேர்வுக்கூட அனுமதிச் சீட்டினை (Hall Ticket) பதிவிறக்கம் செய்திடுமாறு தெரிவிக்கப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.