திருவண்ணாமலை மாவட்டம் சானார்பாளையம், மலைப்பாம்படி பகுதியைச் சேர்ந்தவர்கள் லோகநாதன்–கீதா தம்பதியினர். இவர்கள் கடந்த 25 ஆண்டுகளாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பேகேப்பள்ளியில் உள்ள பஞ்சாயத்து அலுவலக சாலையில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சந்தியா, திவ்யா, மீனா என்று மூன்று பெண் பிள்ளைகள் உள்ள நிலையில், அனைவருக்கும் திருமணம் முடிந்து அதே பகுதியில் வெவ்வேறு இடங்களில் வசித்து வருகின்றனர்.

Advertisment

கடந்த 7-ஆம் தேதி இரவு 8:30 மணியளவில், கீதாவின் கணவர் லோகநாதன், உறவினர் ஒருவரின் துக்க நிகழ்ச்சிக்கு திருவண்ணாமலைக்கு சென்றுவிட்டார். தனது பெரியமகள் சந்தியாவின் 2 பெண் குழந்தைகளையும் துணையாக அழைத்து, திவ்யா தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று உறங்கியுள்ளார். அன்று நள்ளிரவு, அதாவது 8-ஆம் தேதி அதிகாலை 1 மணியளவில், வீட்டின் இரும்பு கேட்டை உடைக்கும் சத்தம் கேட்டுள்ளது. திவ்யா சென்று "யாருடா நீங்க? என்னடா பண்றீங்க?" என்று சத்தம் போட்டுள்ளார். உடனடியாக அந்தக் கும்பல் சென்றுவிட்டது. மேலும், வெளியில் இருக்கும் சைக்கிளைத்தான் திருட வந்திருக்கலாம் என்று திவ்யா நினைத்துள்ளார். அரை மணி நேரத்திற்குப் பிறகு வந்த அந்தக் கும்பல், மீண்டும் ஸ்க்ரூடிரைவர், கட்டிங் பிளேயர் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தி இரும்பு கேட்டை உடைத்து கீழே தள்ளியுள்ளது. இதனால் பதறிப்போன கீதா, தனது மூன்று மகள்களுக்கும் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு, "சீக்கிரம் வாங்க மா, யாரோ கதவை உடைக்கிறாங்க" என்று கதறியுள்ளார்.

Advertisment

மேலும், "யாராவது வாங்க, காப்பாத்துங்க" என்று கூச்சலிட்டுள்ளார். அதற்குள் முகத்தை துணிகளால் மறைத்து கொண்டு, மாஸ்க் மற்றும் தலையில் குல்லா அணிந்திருந்த கும்பல், வீட்டின் கதவை உடைத்து உள்ளே வந்து, கீதாவின் கழுத்தை நெறித்து, "உன்னை கொலை செய்துவிடுவோம், மரியாதையாக வீட்டில் இருக்கும் பணம் மற்றும் நகைகளை எடுத்துக்கொடு" என்று மிரட்டியுள்ளனர். அங்கு தூங்கிக் கொண்டிருந்த 2 பேத்திகளும் சத்தம் கேட்டு விழித்து அழத்தொடங்கியுள்ளன.

கொள்ளையர்கள், கீதாவின் கழுத்தை நெறித்தவாறே, ஸ்க்ரூடிரைவர், கட்டிங் பிளேயரை வைத்து கொலை செய்துவிடுவோம் என்று மிரட்டிக் கொண்டிருக்க, கீதா, "நாங்கள் கூலி வேலைக்கு செல்பவர்கள், எங்களை விட்டு விடுங்கள். எனது வீட்டுக்காரர் ஒரு நோயாளி, நானும் ஒரு நோயாளி, நாங்கள் வாங்கும் சம்பளம் மருந்து மாத்திரைகளுக்கே சரியாகி விடுகிறது. வீட்டில் எதுவும் இல்லை என்றால் எடுத்துக்கொள்ளுங்கள்" என்று கெஞ்சியுள்ளார். அதற்குள், கீதாவின் மருமகன்கள், எதிர் வீட்டில் உள்ளவர்கள் என 10-க்கும் மேற்பட்டோர் கீதாவின் வீட்டின் முன்பு திரண்டனர்.

Advertisment

உடனடியாக அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. பின்னர், இது குறித்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த சிப்காட் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும், 8-ஆம் தேதி காலை புகாரை வாங்கி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில், அந்தக் கும்பல் அன்று இரவே பேகேப்பள்ளி பகுதியில் கையில் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், காவல்துறை சார்பில் சிப்காட் இன்ஸ்பெக்டர் சையத் முபாரக் செல்போன் எண்ணை உதவி எண்ணாக வைத்து, "காவல்துறையின் முக்கிய அறிவிப்பு" என்ற தலைப்பில், பேகேப்பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கொள்ளையர்கள் ஆயுதங்களுடன் சுற்றிதிரிவதால், இரவு நேரங்களில் யாராவது கதவை தட்டினால் கதவை திறக்க வேண்டாம் என்றும், சிப்காட் இன்ஸ்பெக்டருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் இன்ஸ்பெக்டரின் செல்போன் எண்ணுடன் அந்த மெசேஜ் ஃபேஸ்புக், வாட்ஸ்அப் ஆகியவற்றில் வேகமாகப் பரவி வருகிறது. சம்பவம் நடந்து 8 நாட்களாகியும் குற்றவாளிகளை அடையாளம் காண முடியாமல் திணறி வருகின்றனர்.