உச்ச நீதிமன்ற அறையில் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது வழக்கறிஞர் ஒருவர் காலணி வீச முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உச்சநீதிமன்றத்தின் 52வது தலைமை நீதிபதியாக இருக்கும் பி.ஆர்.கவாய், தேர்தல் நிதி பத்திரம் தொடர்பான வழக்கு, புல்டோசரை கொண்டு வீடுகளை இடித்தது தொடர்பான வழக்கு, எஸ்.சி., எஸ்.டி. சமுகத்திற்கான உள் இட ஒதுக்கீடு தொடர்பான வழக்குகளில் தீர்ப்பு வழங்கியுள்ளார். கடந்த மே மாதம் தலைமை நீதிபதியாக பதவி ஏற்றுக்கொண்ட பி.ஆர்.கவாய், உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகளை விசாரித்து வருகிறார்.
அதன்படி, தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு இன்று (06-10-25) உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை விசாரித்துக் கொண்டிருந்தது. அப்போது, வழக்கறிஞர் ஒருவர் திடீரென மேடைக்கு அருகில் சென்று தனது காலணியை கழற்றி தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது வீச முயன்றார். இதைக்கண்டு நீதிமன்றத்தில் இருந்த பாதுகாப்புப் பணியாளர்கள், சரியான நேரத்தில் வழக்கறிஞரை தடுத்து நிறுத்தி அவரை வெளியே அழைத்துச் சென்றனர்.
வெளியே அழைத்துச் செல்லும் போது, ‘சனாதனத்தை அவமதிப்பதைப் பொறுத்துக்கொள்ள மாட்டேன்’ என்று வழக்கறிஞர் கூச்சலிட்டு சென்றதாகக் கூறப்படுகிறது. இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் எந்த தயக்கமும் இல்லாமல் நீதிமன்றத்தில் இருந்த வழக்கறிஞர்கள் தங்கள் வாதங்களைத் தொடருமாறு கேட்டுக் கொண்டார். மேலும் அவர், “இதற்கெல்லாம் கவனத்தை திருப்ப வேண்டாம், நாங்கள் திசைதிருப்பப்படப் போவதில்லை. இந்த விஷயங்கள் என்னை பாதிக்காது” என்று அமைதியாகக் கூறினார்.
தலைமை நீதிபதியின் கண்ணியமான பதில் நீதிமன்ற அறையில் இருந்தவர்களிடமிருந்து பாராட்டைப் பெற்றாலும், இந்திய உச்ச நீதிமன்றத்திற்குள் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.
பல்வேறு அரசியல் தலைவர்களும் இந்த தாக்குதல் முயற்சி சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைத்தள பதிவில், 'உச்ச நீதிமன்றத்திற்குள் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது நடத்தப்பட்ட தாக்குதல் முயற்சி சம்பவம் வெட்கக்கேடான செயல். இது நமது ஜனநாயகத்தின் மிக உயர்ந்த நீதித்துறை அலுவலகத்தின் மீதான தாக்குதலாகும். இது கடுமையான கண்டனத்திற்கு உரியது.
தலைமை நீதிபதி கருணை, அமைதி மற்றும் பெருந்தன்மையுடன் பதிலளித்த விதம் வலிமையைக் காட்டுகிறது. ஆனால் இந்த சம்பவத்தை நாம் எளிதாக எடுத்துக்கொள்ளக்கூடாது. தாக்குதல் நடத்தியவர் தனது செயலுக்கான காரணத்தை வெளிப்படுத்தியிருப்பது, நமது சமூகத்தில் அடக்குமுறை மனநிலை இன்னும் எவ்வளவு ஆழமாக நீடிக்கிறது என்பதைக் காட்டுகிறது.
நீதிமன்றங்களை மதிக்கும் மற்றும் பாதுகாக்கும் நடத்தையில் முதிர்ச்சியைக் காட்டும் ஒரு கலாச்சாரத்தை நாம் வளர்க்க வேண்டும்' என தெரிவித்துள்ளார்.