விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகிலுள்ள டி.வேப்பங்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட தொட்டியங்குளத்தில் 100 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமையான கிழவி அம்மன் கோயில் கண்மாய்க் கரையில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலுக்கு மதுரை, சிவகங்கை, மானாமதுரை, மாந்தோப்பு, சோழவந்தான் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் வழிபாட்டிற்கு வந்து செல்கின்றனர்.

Advertisment

இந்நிலையில், கண்மாய்க்குள் இருப்பதால் கிழவி அம்மன் கோயிலை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று காரியாபட்டி தாசில்தார் மாரீஸ்வரன் தெரிவித்ததாக தகவல் பரவியது. இதனால் கிராம மக்களிடம் அதிருப்தி உருவானது. டி.வேப்பங்குளத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில், கோயிலுக்கு நிலப் பட்டா வழங்க தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று தொட்டியங்குளம் மக்கள் மனு அளித்தனர். ஆனால், கூட்டத்தை நடத்திய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராமநாதன், அந்த மனுவை தீர்மானத்தில் சேர்க்க முடியாது என்று மறுத்தார்.

Advertisment

இதனால் ஆத்திரமடைந்த தொட்டியங்குளம் பகுதி மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் அதிகாரியை முற்றுகையிட்டு தடுத்து வைத்தனர். சூழ்நிலை பதற்றமாக மாறியதைத் தொடர்ந்து, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயராமன் மற்றும் உஷா நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தி அதிகாரியை மீட்க முயன்றனர். ஆனால், வாக்குவாதம் ஏற்பட்டதால் போராட்டம் தீவிரமடைந்து, அதிகாரியின் வாகனத்தை முற்றுகையிட்டனர்.  

இதற்கிடையில் காவல்துறையினர் சிலரைக் கைது செய்ய முயன்றபோது, ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால், பரபரப்பு ஏற்பட்டது. அதே நபர், அங்கிருந்து புறப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலரின் காரை நோக்கி ஓடி, காரில் தொங்கியபடி செல்ல பதற்றம் அதிகரித்தது. பின்னர் திருச்சுழி டி.எஸ்.பி. பிரதீப் சம்பவ இடத்துக்கு வந்து மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை. ‘கோயில் பட்டா வழங்க தீர்மானம் நிறைவேற்றாமல் எங்கும் செல்ல மாட்டோம்’ என உறுதியுடன் போராட்டத்தில் ஈடுபட்ட 20-க்கும் மேற்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து முடுக்கன்குளம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் தற்காலிகமாக தங்க வைத்தனர். இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருவதால், பாதுகாப்பு பணிக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 
 

Advertisment