Attempt to rob a jewelry store in kallakurichi
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர், கடந்த 30 வருடங்களாக சின்னசேலத்தில் உள்ள கடைவீதியில் நகைக்கடை நடத்தி வந்துள்ளார். இதனிடையே, கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்னால் சேலம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நாதன் தங்க மாளிகை என்ற பெயரில் கடை ஒன்றை நிறுவியுள்ளார்.
இந்நிலையில், கடந்த 17 ம் தேதி மாலை 7 மணியளவில் உறவினர் வீட்டு விசேஷத்திற்கு செல்வதற்காக அவர் தனது கடையை மூடிவிட்டு சென்றுள்ளார். பின்பு மறுநாள் வழக்கம்போல் காலை 10 மணி அளவில் கடையை திறக்க வந்துள்ளார். அப்போது, கடையிலுள்ள ஷட்டர் கட்டிங் மெஷின் வைத்து அறுக்கப்பட்டிருந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சீனிவாசன் சின்ன சேலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் சின்ன சேலம் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கடையில் உள்ள சிசிடிவி காட்சிகளை சோதனை செய்தனர்.
சிசிடிவி காட்சிகளை சோதனை செய்ததில், இரண்டு நபர்கள் கடையில் உள்ள ஷட்டரை மிஷின் வைத்து அறுத்தது பதிவாகி இருந்தது. ஆனால், நகை ஏதும் திருடு போகவில்லை எனவும் இது வெறும் திருட்டு முயற்சி தான் எனவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருடர்கள் நகைக் கடை உள்ளே புகுந்து ஷட்டரை மிஷின் வைத்து கட் செய்து திருட முயற்சித்த சிசிடிவி காட்சிகள் தற்பொழுது வெளியாகி உள்ளது.
சின்ன சேலம் பகுதியில் இது போன்று தொடர் திருட்டு சம்பவங்கள் அடிக்கடி நடந்தேறி வருவதாகவும், அது மட்டும் இல்லாமல் இருசக்கர வாகனங்கள் தொடர்ந்து திருடு போவதாகவும் பொது மக்களும் சமூக ஆர்வலர்களும் குற்றம் சாட்டுகின்றனர். நகை கடையின் ஷட்டரை அறுத்து திருட முயற்சித்த சம்பவம் சின்னசேலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Follow Us