Attempt to kidnap school boy - Northern State man beaten up by locals Photograph: (DINDIGUL)
திண்டுக்கல்லில் 14 வயது சிறுவன் பள்ளி சென்று கொண்டிருந்த போது வடமாநில நபரால் கடத்த முயன்ற சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்துள்ள மயிலாடும்பாறை பகுதியில் உள்ளது வள்ளி நகர். இங்கு வசித்து வரும் சுரேந்திரன் என்பவரின் 14 வயது மகன் ஒன்பதாம் வகுப்பு பயின்று வந்தார். சம்பவத்தன்று வீட்டில் இருந்து பள்ளிக்கு வேனில் ஏறுவதற்காக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த வடமாநில நபர் ஒருவர் சிறுவனை கையைப் பிடித்து தரதரவென இழுத்துச் செல்ல முயன்றுள்ளார் இதனால் அதிர்ச்சியடைந்த சிறுவன் அழுது கொண்டே கூச்சலிட்டுள்ளான்.
அக்கம்பக்கத்திலிருந்த பொதுமக்கள் அந்த வடமாநில நபரைப் பிடித்துத் தாக்கினர். கட்டி வைக்கப்பட்ட அந்த நபர் பின்னர் காவல் நிலையத்திற்க்கு தகவல் கொடுக்கப்பட்டு போலீசரிடம் ஒப்படைக்கப்பட்டார். போலீசார் நடத்திய விசாரணையில் சிறுவனைக் கடத்த முயன்ற அந்த நபர் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த தனுஷ் சர்க்கார் என்பது தெரியவந்தது. உடனடியாக போலீசார் பழனி அடிவாரம் காவல் நிலையத்திற்கு அவரை அழைத்துச் சென்றனர். மேலும் அந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை சோதனை செய்த பொழுது சிறுவனைக் கடத்த முயன்ற காட்சி இடம்பெற்றிருந்தது. பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.