திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த செட்டியப்பனூர் கூட்டுசாலை அருகில் செயல்பட்டு வரும் அரசு மதுபான கடையில் நாள்தோறும் லட்சக்கணக்கில் மதுபான விற்பனை நடைபெற்று வருகிறது.இந்நிலையில் நேற்று (25.02.2026) இரவு 9 மணிக்கு மதுபானம் வாங்குவதாகச் சென்ற மூன்று பேர் கடை ஊழியரிடம் இரண்டு 500 ரூபாய் மற்றும் 200,100 ரூபாய் நோட்டுகள் என 2000 ரூபாய் கொடுத்து மதுபாட்டில்கள் கேட்டுள்ளனர்.
இதனையடுத்து கடை ஊழியர் நோட்டுகளைச் சரிபார்த்து கள்ள நோட்டுகளாக இருப்பதாகத் தெரிகிறது எனத் தெரிவித்தார். அப்போது உஷாரான நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். இந்த சம்பவம் குறித்துக் கடை ஊழியர் மேலாளருக்குத் தகவல் அளித்ததன் பேரில் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தகவலின் பெயரில் வாணியம்பாடி கிராமிய காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு கள்ள நோட்டுகளை மாற்ற முயன்ற நபர்களைத் தேடி வருகின்றனர்.
மற்றொருபுறம் வாணியம்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து அரசு மதுபான கடை, பெட்ரோல் பங்க், டீக்கடை உள்ளிட்ட இடங்களில் சிலர் கள்ள நோட்டுகளைப் புழக்கத்தில் விட்டு மாற்றும் செயலில் ஈடுபட்டு வரும் நிலையில் அந்த நோட்டுகள் தெரியாமல் மீண்டும் பொதுமக்களிடம் செல்வதால் வாணியம்பாடி பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.
Follow Us