Attack on journalists at MDMK rally - South Indian Journalists Union strongly condemns Photograph: (mdmk)
வைகோ பங்கேற்ற மதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு தென்னிந்திய பத்திரிகையாளர்கள் யூனியன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் நேற்று (09/07/2025) நெல்லை மண்டல மதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசத் தொடங்கிய வைகோ, சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக உரையாற்றினார். அப்போது தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் சிலர் வெளியே சென்றனர்.
தொண்டர்கள் வெளியேறிய காட்சியையும், அதனால் இருக்கைகள் காலியாக கிடந்ததையும் செய்தியாளர்கள் படம் எடுத்தனர். இதனை கவனித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ,"காலி சேர்களை எதுக்கு படம் எடுக்குறீங்க.. அந்த கேமராவ புடிங்கி பிலிம் ரோலை உருவுங்க" என சொல்லி செய்தியாளர்களை வெளியேற்றுமாறு நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து கட்சியினர், செய்தியாளர்கள் மீது தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவத்திற்கு தென்னிந்திய பத்திரிகையாளர்கள் யூனியன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியான கண்டன அறிக்கையில், 'செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்து விட்ட வைகோ மன்னிப்பு கேட்கவும், வைகோ மற்றும் தாக்கியவர்கள் உள்ளீட்ட அனைவர் மீதும் வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தென்னிந்திய பத்திரிகையாளர் யூனியன் வலியுறுத்துகிறது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/07/10/a4360-2025-07-10-12-14-22.jpg)
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில், நெல்லை மண்டல மதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டு நீண்ட நெடிய உரையாற்றினார். ஆனால் அவரது உரையைக் கேட்காமல் கட்சித் தொண்டர்கள் வெளியேறத் தொடங்கினர். இந்த காட்சியையும் காலியான இருக்கைகளையும் செய்தியாளர்கள் படம் பிடித்தனர். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, அந்த செய்தியாளர்களை வெளியேற்றுமாறு உத்தரவிட்டார். மேலும் கையில் உள்ள கேமராவை பறிமுதல் செய்யுமாறு கூறினார். இதைக் கேட்டு அவரது கட்சி தொண்டர்கள் செய்தியாளர்கள் மீது சரமரியாக தாக்குதலில் ஈடுபட்டனர்.
தந்தி டிவி, தமிழ் ஜனம் உள்ளிட்ட பல செய்தியாளர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் தமிழ் ஜனம் செய்தியாளருக்கு தலையில் காயம் ஏற்பட்டு முன் பகுதியில் வீக்கம் ஏற்பட்டுள்ளது. தாக்குதல் நடத்திய நபர்களிடமிருந்து செய்தியாளர்களை போலீசார் காப்பாற்றி அனுப்பி வைத்துள்ளனர். காவல்துறையினர் முன்னிலையிலே செய்தி சேகரிக்க சென்ற சென்ற செய்தியாளர்கள் தாக்கப்பட்டு இருப்பது, செய்தியாளர்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது.
மிகுந்த அரசியல் அனுபவம் கொண்ட வைகோ அவர்களே இத்தகைய மோசமான மனப்பாங்கை வெளிப்படுத்தியிருப்பதை கண்டிப்பதுடன், வைகோ உள்ளிட்ட தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது உடனடியாக வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்கும் படியும், வைகோ பகிரங்க மன்னிப்பு கேட்கும்படியும் தென்னிந்திய பத்திரிகையாளர்கள் யூனியன் சார்பில் வலியுறுத்துகிறோம்.
எப்பொழுதும் போல அரசு மவுனம் காக்காமல் காவல்துறைக்கு தக்க நடவடிக்கை எடுக்கவும், மீண்டும் இதுபோல் நடக்காமல் பத்திரிகையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என தென்னிந்திய பத்திரிகையாளர்கள் யூனியன் கேட்டுக்கொள்கிறது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் மதிமுக தரப்பில் கொடுக்கப்பட்ட விளக்கத்தில் கூட்டம் அதிமாக இருந்ததால் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற அரங்கிற்கு வெளியேயும் நாற்காலிகள் போடப்பட்டிருந்தது. இதனால் வெளியேறிய நிர்வாகிகளை வைகோ கண்டித்தபோது காலி சேர்களை செய்தியாளர்கள் படம் பிடித்தததால் தள்ளுமுள்ளு நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.