சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் மீது காரைக்கால் மீனவர்கள் தாக்குதலில் ஈடுபட்ட சம்பவத்தின் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை காசிமேடு பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் இன்று அதிகாலை 3 மணி அளவில் தன்னுடைய விசைப்படகில் ஆறு பேருடன் மீன்பிடிக்கச் சென்றுள்ளார். ஐந்து நாட்டிகல் தொலைவில் சுரேஷ் மற்றும் அவரது மீனவக் குழுவினர் மீன்பிடித்துக் கொண்டிருந்த பொழுது 10க்கும் மேற்பட்ட காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த விசைப்படகுகள் வந்துள்ளது. தொடர்ந்து காசிமேடு மீனவர்கள் வந்த படகில் உள்ள வலைகள் மற்றும் மீன்பிடி பொருட்களை அவர்கள் சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

ஆயுதங்கள் மற்றும் ரப்பர் குண்டுகளை வைத்து காசிமேடு மீனவர்கள் மீது காரைக்கால் மீனவர்கள் தாக்கியதாகக் கூறப்படும் நிலையில் இதுகுறித்து காசிமேடு காவல் நிலையத்திலும் மீன்வளத்துறை அதிகாரிகளிடமும் தாக்குதலுக்கு உள்ளான காசிமேடு மீனவர்கள் புகார் அளித்துள்ளனர். காசிமேடு மீனவர்கள் மீது காரைக்கால் மீனவர்கள் தாக்குதலில் ஈடுபட்ட சம்பவத்தின் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.