உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் 69வது தேசிய பள்ளி சாம்பியன்ஷிப் போட்டி கடந்த நவம்பர் 30ஆம் தேதி டிசம்பர் 4ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் மல்யுத்தம், கூடைபந்து, கால்பந்து, நீச்சல் போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது. இந்த விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்காக நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் உத்தரப் பிரதேச மாநிலத்துக்கு சென்றனர்.

Advertisment

அந்த வகையில் ஒடிசாவில் இருந்து 10 ஆண்கள், 8 பெண்கள் என 18 இளம் மல்யுத்த வீரர்கள் ஒடிசா மாநில பள்ளி கல்வித்துறையால் உத்தரப் பிரதேசத்தில் நடைபெறும் தேசிய அளவிலான போட்டிக்கு அனுப்பப்பட்டனர். ஆனால் ரயிலில் டிக்கெட் உறுதியாகாததால், கடும் குளிரில் அந்த வீரர்கள் ரயில் கழிப்பறைகளுக்கு அருகில் உட்கார வைக்கப்பட்டனர். போட்டியில் பங்கேற்று திரும்பும் போது கூட, அவர்கள் ரயில் கழிவறை அருகே பயணித்ததாகக் கூறப்படுகிறது. இரு பயணத்திலும் உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டுகள் ஏற்பாடு செய்யாததால், அவர்கள் கடும் குளிரில் ரயிலில் பயணித்த அவலம் ஏற்பட்டுள்ளது. இது அவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் குறித்து கவலைகளை எழுப்பியுள்ளது.

Advertisment

குளிரில், ரயில் கழிவறை அருகே மல்யுத்த வீரர்கள் அமர்ந்தப்படியே பயணம் மேற்கொள்ளும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விளையாட்டு ஆர்வலர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள், மாநில அரசின் அதிகாரிகளை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஒரு தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்று மாநிலத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இளம் விளையாட்டு வீரர்களுக்கு அடிப்படை பயண ஏற்பாடுகள் கூட செய்யவில்லை என கேள்வி எழுப்பியுள்ளனர்.