திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காட்டில் காதல் திருமணம் விவகாரத்தில் சிறுவனைக் கடத்திச் சென்று தாக்கிய விவகாரமானது தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. முன்னதாக இந்த சிறுவனை ஏ.டி.ஜி.பி. ஜெயராம் காரில் கடத்தி செல்லப்பட்டு மிரட்டப்பட்டார் எனத் தகவல் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இது தொடர்பாகப் புரட்சி பாரதம் கட்சியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான பூவை ஜெகன்மூர்த்தி மீது ஆள்கடத்தல் உள்ளிட்ட 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. தொடர்ச்சியாக ஏ.டி.ஜி.பி. ஜெயராமனை தமிழக அரசு சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டிருந்தது.
மேலும் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணையானது நடைபெற்று வருகிறது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னதாக உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, 'ஏன் இன்னும் ஏடிஜிபி ஜெயராமுக்கு சம்மன் கொடுக்கவில்லை. இந்த வழக்கு சிபிஐக்கு மாற்ற வேண்டுமா? என நீதிமன்றம் கடுமையாக கேள்விகளை எழுப்பி இருந்தது.
இந்நிலையில் ஏடிஜிபி ஜெயராமுக்கு சம்மன் கொடுக்கப்பட்டு நேரில் ஆஜராக வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் காஞ்சிபுரம் சிபிசிஐடி அலுவலகத்தில் ஏடிஜிபி ஜெயராம் இன்று ஆஜரானார். அவரிடம் நான்கு மணி நேரமாக விசாரணை நடைபெற்றது. சிபிசிஐடி, டிஎஸ்பி ஜவஹர் தலைமையிலான போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டு அதை வீடியோ பதிவு செய்யப்பட்டதாகவும், எழுத்துப்பூர்வமாகவும் பதில்கள் பெறப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.