தூத்துக்குடியைச் சேர்ந்த ரவுடி ஒருவர் சேலத்தில் வைத்து மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் மதன்குமார் என்கிற அப்பு. பல்வேறு கொலை வழக்கில் தொடர்புடைய இவர் ரவுடியாக வலம் வந்த நிலையில் கொலை வழக்கு ஒன்றில் சேலம் அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதனடிப்படையில் நாள்தோறும் கையெழுத்திடுவதற்காக சேலம் அஸ்தம்பட்டி காவல் நிலையத்திற்கு வந்துள்ளார். வழக்கம்போல நேற்று கையெழுத்திடுவதற்காக மனைவியுடன் வந்த மதன், ஹோட்டல் ஒன்றில் சாப்பிடுவதற்காக உள்ளே புகுந்துள்ளார். அப்போது இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த ஆறு பேர் கொண்ட கும்பல் உணவகத்திற்கு உள்ளே சென்று மதன்குமாரை மனைவியின் கண்முன்னேயே சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர். சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் மதன்குமார் உயிரிழந்தார்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மதன்குமாரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்த நிலையில் படுகொலை சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அஸ்தம்பட்டி காவல் நிலையத்திற்கும் படுகொலை நிகழ்த்தப்பட்ட ஹோட்டலுக்கும் இடையே 50 மீட்டர் இடைவெளியே உள்ள நிலையில் காவல் நிலையத்திற்கு அருகிலேயே படுகொலை நிகழ்ந்துள்ளது அந்த பகுதியில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருந்தது.
இந்த கொலை சம்பவத்தில் கொலை செய்தவர்கள் தப்பி ஓடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி இருந்தது. அதை அடிப்படையாக வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் இந்த கொலை சம்பவத்தில் நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய ஹரிபிரசாத், அந்தோணி, சந்தோஷ் ,சூர்யா உள்ளிட்ட நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். நால்வரும் திண்டுக்கல் மாவட்டத்தில் பதுங்கியிருந்த நிலையில் சேலம் மாநகர காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தலைமறைவாகியுள்ள மேலும் இரண்டு பேர் குறித்து கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.