தென்காசி மாவட்டம் திருவேங்கடத்தை சேர்ந்தவர் 48 வயதான வசந்தா. இவர் கலிங்கப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்சாக பணியாற்றி வருகிறார். இவருடைய கணவர் கிருஷ்ணசாமி உளவுப்பிரிவு அதிகாரியாக உள்ளார். கடந்த 24ம் தேதி மாலை 3.30 மணியவில் வசந்தா தன்னுடைய ஸ்கூட்டியில் கோவில்பட்டி - ராஜபாளையம் நெடுஞ்சாலையில் உள்ள மைப்பாறை பகுதியில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, அங்குவந்த முகமூடி அணிந்திருந்த நபர் ஒருவர், வசந்தாவின் கழுத்தில் கிடந்த தாலி செயினை பறித்துள்ளார். 

Advertisment

அப்போது வசந்தாவுக்கும் முகமூடி கொள்ளையனுக்கும் இடையே நடந்த மல்லுக்கட்டில் வசந்தா நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். அந்த நேரத்தில், தாலி செயினை பறித்துக் கொண்டு கொள்ளையன் அங்கிருந்து தப்பிச்சென்று உள்ளார். தாலிச் செயினை பறிகொடுத்த நர்ஸ்.. உடனடியாக தனது கணவர் கிருஷ்ணசாமிக்கு செல்போனில் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் அவ்வழியாக பைக்கில் வந்தவர்களிடம் நகை பறிப்பு சம்பவத்தை சொல்லி கதறி அழுதுள்ளார். 

Advertisment

இந்த சம்பவம் நடந்த அடுத்த சில நிமிடங்களில் கோவில்பட்டி - ராஜபாளையம் நெடுஞ்சாலையில் உள்ள அனைத்து செக் போஸ்ட்களும் உஷார் படுத்தப்பட்டு போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதில் பைக்கில் தப்பிச் சென்ற  கொள்ளையன் கோவில்பட்டி வ.உ.சி. நகரை சேர்ந்த 32 வயதான பாண்டித்துரை என்பவரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். 

பின்னர், அவரை திருவேங்கடம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியானது. பிடிபட்ட பாண்டித்துரை எம்.எஸ்.சி. பிஎட் படித்துவிட்டு கோவில்பட்டி ராஜீவ் நகரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் கடந்த 7 ஆண்டுகளாக உதவி தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். 60 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் பெற்று வந்த இவர் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் சிக்கியிருக்கிறார். அதில், அதிக மோகம் கொண்டு விளையாடி சுமார் பத்து லட்சத்திற்கும் மேல் பணத்தை பறி கொடுத்துள்ளார். 

Advertisment

மேலும், அந்த சூதாட்டத்தில் இருந்து விடுபட முடியாமல்.. பாண்டித்துரை தனது மனைவியின் நகையை அடகு வைத்தும், வெளியில் பல நபர்களிடம் வட்டிக்கு கடன் வாங்கியும், தொடர்ந்து ரம்மி விளையாடி வந்துள்ளார்.  இதனால் அவருக்கு அதிகளவில் கடன் பிரச்சனை இருந்துள்ளது. ஒரு கட்டத்தில், இந்த விஷயம் குடும்பத்தினரிடம் தெரியவரவே பாண்டித்துரைக்கும் அவரது காதல் மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த பிரச்சனை நாளுக்கு நாள் பூதாகரமாக வெடிக்கவே.. பாண்டித்துரையை விட்டுபிரிந்த அவரது மனைவி குழந்தையுடன் ராஜபாளையத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். 

இந்நிலையில், மிகுந்த விரக்தியுடன் காணப்பட்ட ஆசிரியர் பாண்டித்துரை, கடந்த ஒரு வாரமாக பள்ளிக்கு செல்லாமல் லீவு எடுத்துள்ளார். தன்னுடைய கடன் நெருக்கடியில் இருந்து மீள்வதற்காகவும், ஆன்லைன் ரம்மி விளையாட்டில் தொடர்ந்து ஈடுபடுவதற்காகவும்.. பாண்டித்துரை க்ரைம் சம்பவத்தில் ஈடுபடுவது என முடிவெடுத்துள்ளார். அதன் நீட்சியாக தான்.. இந்த நகை பறிப்பில் இறங்கியுள்ளார் என்பது போலீஸ் விசாரணையில் அம்பலமானது. இதையடுத்து, பாண்டித்துரையை கைது செய்த திருவேங்கடம் போலீசார் அவரை பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

செய்தியாளர் - எஸ்.மூர்த்தி