தனியார் கோவிலில் வருவாய் பிரச்சனை தொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்காக 1.50 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்ற அறநிலையத்துறை உதவி ஆணையர் கோவையில் வைத்து லஞ்ச ஒழிப்புத்துறையால் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள பாப்பம்பட்டி கிராமத்தில் தனியார் பராமரிப்பில் இருந்த கோவிலின் ஆண்டு வருமானம் 40 லட்சம் ஆக இருந்தது. இதில் நிதி மேலாண்மை முறையாக இல்லை என்பதால் அந்த கோவிலை இந்து சமய அறநிலையத்துறைக்கு கொண்டு வரவேண்டும் என கோவில் நிர்வாகி ஒருவர் புகார் மனு கொடுத்திருந்தார். 12 வாரங்களுக்குள் சம்பந்தப்பட்ட கோவிலை இந்து சமய அறநிலையத்துறைக்கு கீழ் கொண்டு வருவதற்கான வரம்புகள் இருக்கிறதா என்று ஆராய வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதனடிப்படையில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் இந்திரா விசாரணை நடத்தி வந்தார். அப்பொழுது கோவிலை அறநிலைத்துறைக்கு கீழ் கொண்டுவர வேண்டுமென்றால் மூன்று லட்சம் ரூபாய் வேண்டும் என கோவில் நிர்வாகியிடம் இந்திரா லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது. மூன்று லட்சம் தர முடியாது எனக் கூறிய நிலையில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை கோவை பாரதியார் சாலைக்கு வர வைத்து இந்திராவிடம் கோவில் நிர்வாகி ஒருவர் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இந்திராவை கையும் களவுமாக கைது செய்தனர். உடனடியாக லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்ட இந்திராவிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.