இந்தாண்டு தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதால் 2026-2027ஆம் நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கடந்த 17ஆம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அதனை தொடர்ந்து வேளாண் இடைக்கால பட்ஜெட்டை வேளாண்மை மற்றும் உழவர்நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால நிதி பட்ஜெட் குறித்தான விவாதமும், வேளாண் இடைக்கால பட்ஜெட் குறித்தான விவாதமும் கடந்த 3 நாட்களாக நடைபெற்றது. இந்த விவாதத்தின் போது திமுக - அதிமுக இடையே காரசார வாதம் நடைபெற்றது.

Advertisment

இந்த நிலையில், 16வது சட்டப்பேரவை கடைசி கூட்டத்தொடரின் இறுதி நாள் இன்று (20-02-26) நடைபெற்றது. இதை அதிமுக எம்.எல்.ஏக்கள் புறக்கணித்து சட்டப்பேரவைக்கு வராத நிலையில், மற்ற தமிழக எம்.எல்.ஏக்கள் பங்கேற்று உரையாடினர். அந்த வகையில் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவு எம்.எல்.ஏவான உசிலம்பட்டி எம்.எல்.ஏ ஐயப்பன் பேசினார். அதில் அவர் பேசியதாவது, “அன்பு கரங்கள் என்ற திட்டத்தின் மூலம், தாய் தந்தையரை இழந்த குழந்தைகளுக்கு திட்டம். தமிழ்நாட்டில் இருக்கின்ற அனைத்து தாய்மார்களும் காலையில் தங்களது குழந்தைகளுக்கு சுட சுட உணவு கொடுப்பார்கள் என்பது கிடையாது.

Advertisment

ஆரம்ப பள்ளிக்கு வருகின்ற பிஞ்சு குழந்தைகளுக்கு தாயாக இருந்து சுட சுட உணவு வழங்கும்படி நமது முதல்வர் காலை உணவு திட்டத்தை வழங்கியிருக்கிறார். எந்த தேர்தலில் ஓட்டு போடுவதற்கு அந்த திட்டத்தை கொண்டு வந்தார் என்பதை நாம் சிந்தித்து பார்க்க வேண்டும். முதல்வர் ரூ.5,000, கொடுத்துவிட்டார் என்று இந்த அவையில் கூப்பாடு போட்ட தலைவர்கள் எல்லாம் இன்று வரவில்லை. ஆனால், அந்த காலை உணவு திட்டத்தை ஏன் இவர்கள் பாராட்டவில்லை?, பாராட்ட மனமில்லை. எம்.ஜி.ஆர் கொண்டு வந்த சத்துணவு திட்டத்தை இன்றும் நாம் பேசுகிறோமோ அது போல காலை உணவு திட்டத்தை தமிழ் சமுதாயம் இருக்கும் வரை தமிழ்நாட்டு முதல்வரை பாராட்டிக் கொண்டே இருக்கும். கடந்த டிசம்பர் மாதம் ஒரு அரசாணை வெளியிடப்பட்டது. அதில் மதுரை, திண்டுக்கல், தேனி ஆகிய மூன்று மாவட்டத்தில் உள்ள கள்ளர் சிகரமைப்பு துறை சார்பாக ஆசிரியர் பணியிட பற்றாக்குறையை அந்த பள்ளி மேலாண்மை தேர்வு செய்து கொள்ளலாம், அதற்குண்டான தொகுப்பூதியம் அரசு வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த அரசாணை மூலம் 3 மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு 200க்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டு அந்த பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளி மாணவர்கள் சார்பாகவும், எனது தொகுதி மக்களின் சார்பாகவும் நான் முதல்வருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

நாங்கள் எப்போது கை தூக்கினாலும் உடனே எங்களுக்கு பேசுகின்ற வாய்ப்பை வழங்குகின்ற பேரவைத் தலைவருக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். வருகின்ற தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று தமிழகத்தின் முதல்வராக நமது மு.க.ஸ்டாலின் வரவேண்டும். எம்.ஜி.ஆர் ஆசியோடும், ஜெயலலிதா ஆசியோடும் மீண்டும் மீண்டும் வர வேண்டும் என்று நான் அவரை வாழ்த்தி எங்கள் ஓபிஎஸ்ஸின் வாழ்த்துகளோடு நன்றி கூறுகிறேன்” என்று தெரிவித்தார். இதை கேட்டதுமே, திமுக உறுப்பினர்கள் சிரித்துக்கொண்டே மேஜை மீது தட்டினர். மேலும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புன்னகையோடு ஐயப்பன் பேசியதை கேட்டுக் கொண்டிருந்தார். 

Advertisment