தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ளத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே ஆயத்தமாகி வருகின்றனர். குறிப்பாக விருப்ப மனு, தொகுதி பங்கீடு, கூட்டணி கணக்குகள், தேர்தல் பரப்புரை என அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிரமாக பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இத்தகைய சூழலில் தான்  சட்டமன்ற தேர்தலையொட்டி தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவை அதிமுக நியமித்திருந்தது. 

Advertisment

அதில் அதிமுக முன்னாள் அமைச்சர்களான நத்தம் விஸ்வநாதன், பொன்னையன், பொள்ளாச்சி ஜெயராமன், சி.வி. சண்முகம், செம்மலை, வளர்மதி, ஓ.எஸ் மணியன், ஆர்.பி. உதயகுமார் மற்றும் வைகைச் செல்வன் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். இந்நிலையில் அறிக்கை தயாரிக்கும் குழுவினர் மண்டலம் வாரியாகச் சென்று பொதுமக்களின் கருத்துகளையும், தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய தரவுகளையும் பெறுவதற்கான சுற்றுப் பயணத் திட்டம் குறித்து எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எந்தவொரு தேர்தல் என்றாலும், மக்கள் பிரச்சனைகளுக்கான தீர்வுகளை, எதிர்கால தமிழ் நாட்டின் வளர்ச்சிக்கான திட்டங்களை உள்ளடக்கியதாக, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கைகள் இருந்திருக்கின்றன. 

Advertisment

அந்த வகையில், தமிழ் நாட்டு மக்களின் நலனையும், முன்னேற்றத்தையும் முன்னிலைப்படுத்தும் வகையில், பல்வேறு தரப்பு மக்களைச் சந்தித்து தரவுகளை சேகரித்து, ஆகச் சிறந்த தேர்தல் அறிக்கையினை தயாரிக்கும் பொருட்டு, 'அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர்' தமிழ்நாடு முழுவதும், வருகின்ற 07.1.2026 முதல் 20.1.2026 வரை,  9 மண்டலங்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார்கள். எனவே சம்பந்தப்பட்ட மண்டலங்களுக்கு உட்பட்ட மாவட்டக் கழகச் செயலாளர்கள், தங்களுக்குள் கலந்து ஆலோசித்து, அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர், சம்பந்தப்பட்ட மண்டலங்களுக்கு வருகை தந்து பொதுமக்களின் கருத்துகளைப் பெறும் வகையில், அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்திட வேண்டும். 

trip-admk-manifesto

இந்த கூட்டம் நடைபெறுவதற்கான மண்டபத்தை, சம்பந்தப்பட்ட மாவட்டக் கழகச் செயலாளர் முன்பதிவு செய்திட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன். தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர் வரும்போது, மண்டலத்திற்கு உட்பட்ட மாவட்டக் கழகச் செயலாளர்களும், நிர்வாகிகளும், அந்தந்த மாவட்டங்களில் உள்ள விவசாயிகள், விவசாய சங்கங்கள், விவசாயத் தொழிலாளர்கள், கைத்தறி மற்றும் நெசவுத் தொழிலாளர்கள், மோட்டார் தொழிலாளர்கள், மீனவர்கள், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ரயில்வே தொழிற்சங்கங்கள், தொழில் முதலீட்டாளர்கள், சிறு, குறு தொழில் முதலீட்டாளர்கள், வணிகர் சங்கங்கள், வியாபாரிகள் சங்கம், அமைப்பு சாரா தொழிலாளர்கள், பொதுநலச் சங்கங்கள், மகளிர் சுயஉதவிக் குழுக்கள், மாணவர்கள், பொதுநலன் சார்ந்த அமைப்புகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களிடமும், அவர்களுடைய தேவைகள், எதிர்பார்ப்புகள் எவை எவை என்று, நேரடியாக அமைப்புகளின் பிரதிநிதிகளை அழைத்து வந்தோ அல்லது அவர்களிடம் தரவுகளைப் பெற்று வந்தோ, குழுவினரிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

Advertisment