தமிழகத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு உள்ளிட்ட பணிகளை திமுக, அதிமுக ஆகிய இருபெரும் கட்சிகள் தொடங்கியுள்ளன. அந்த வகையில் கூட்டணி கட்சிகளுடன் இன்று (22.02.2026) முதல் தொகுதி பங்கீட்டு தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தப்படும் என திமுக ஏற்கெனவே அறிவித்திருந்தது.

Advertisment

அதன்படி கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த திமுக சார்பில் குழு அமைக்கப்பட்டது. அதாவது மக்களவை எம்.பி.யும், திமுக பொருளாளருமான டி.ஆர். பாலு தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவின் உறுப்பினர்களாக திமுக முதன்மைச் செயலாளாரும், அமைச்சருமான கே.என். நேரு, திமுக துணைப் பொதுச் செயலாளர் திருச்சி சிவா எம்.பி., துணைப் பொதுச் செயலாளர் ஆ. ராசா எம்.பி., அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினரும் அமைச்சருமான எ.வ. வேலு, உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினரும் அமைச்சருமான எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

Advertisment

இத்தகைய சூழலில் தான் திமுக கூட்டணியில் முதல் கட்சியாக இந்தியன் யூனியன் முஸ்லீம் கட்சிக்கு திமுக அழைப்பு விடுத்திருந்தது. இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சி தலைவர் காதர் மைதீன் தலைமையில் அமைக்கப்பட்ட 5 பேர் கொண்ட குழுவும், திமுக சார்பில் அமைக்கப்பட்ட 7 பேர் கொண்ட குழுவும் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். கடந்த சட்டமன்றத் தேர்தலில் 3 தொகுதியில் போட்டியிட்ட இந்தியன் யூனியன் முஸ்லீம் கட்சி 3 தொகுதியிலும் தோல்வியடைந்த நிலையில், இந்த முறை கூடுதலாக தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர் எனக் கூறப்படுகிறது. 

அதே சமயம் திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம், தேமுதிக உள்ளிட்ட புதிய கட்சிகள் இணைந்துள்ளதால், அதே எண்ணிக்கையோ அல்லது அதற்கும் குறைவான என்ணிக்கையோ இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு திமுக ஒதுக்கும் என்றும் கூறப்படுகிறது. மற்றொருபுறம் மனித நேய மக்கள் கட்சி, மதிமுகவுடன் நாளையும் (23.02.22026), பிப்ரவரி 26ஆம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடனும், பிப்ரவரி 27ஆம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடனும் திமுக தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை நடத்த உள்ளது.

Advertisment