தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ளத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே ஆயத்தமாகி வருகின்றனர். குறிப்பாக விருப்ப மனு, தொகுதி பங்கீடு, கூட்டணி கணக்குகள், தேர்தல் பரப்புரை என அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிரமாக பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில்  சட்டமன்ற தேர்தலையொட்டி தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவை அதிமுக நியமித்துள்ளது. 

Advertisment

அதில் அதிமுக முன்னாள் அமைச்சர்களான நத்தம் விஸ்வநாதன், பொன்னையன், பொள்ளாச்சி ஜெயராமன், சி.வி. சண்முகம், செம்மலை, வளர்மதி, ஓ. எஸ் மணியன், ஆர்.பி. உதயகுமார் மற்றும் வைகைச் செல்வன் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். இதற்கான உத்தரவை அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி எடப்பாடி பழனிசாமி பிறப்பித்துள்ளார். மேலும் இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “தமிழ்நாட்டில் 17வது சட்டமன்றப் பேரவைக்கான பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. 

Advertisment

இதனை முன்னிட்டு, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், மக்களுக்கு பல்வேறு வகைகளில் நலம் பயக்கும் வகையிலான தேர்தல் அறிக்கையினை தயார் செய்வதற்காக, குழு அமைக்கப்படுகிறது. இந்த குழுவினர் தமிழ் நாடு முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, பல்வேறு தரப்பட்ட மக்களின் கருத்துகளையும், தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய தரவுகளையும் பெற்று வரும் வகையிலான சுற்றுப் பயணத் திட்டம் விரைவில் வெளியிடப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

kanimozhi

முன்னதாக திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி எம்.பி.யுமான கனிமொழி தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவை திமுக அமைத்தது. இந்த குழுவில் அமைச்சர்கள் டி.ஆர்.பி. ராஜா, கோவி.செழியன், பழனிவேல் தியாகராஜன் மற்றும் முன்னாள் எம்.பி.களான,  டி.கே.எஸ்.இளங்கோவன்  எம்.எம்.அப்துல்லா, எம்.எல்.ஏ. எழிலன், மற்றும் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மேலும் பேராசிரியர், மருத்துவர், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி மற்றும் தொழில் முனைவோர் என பல்துறை வல்லுநர்கள் 12 பேர் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Advertisment