எட்டயபுரத்தில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட முயன்றதாக வடமாநிலத்தைச் சேர்ந்தவர் உட்பட இருவர் கைது.

Advertisment

தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் கோவில்பட்டி நெடுஞ்சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில், கோவில்பட்டி சரமாரியம்மன் அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சரவணன் என்பவர் சப்ளையராக வேலை பார்த்து வந்துள்ளார். அதே ஹோட்டலில், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த குமார் சர்மா என்பவர் சைனீஸ் மாஸ்டராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு சப்ளையர் சரவணன், பள்ளிவாசல் தெருவில் உள்ள பெட்டிக்கடையில் மது போதையில் 500 ரூபாய் நோட்டை கொடுத்து சில்லரை மாற்ற முயன்ற பொழுது, அந்த நோட்டில் குழந்தைகள் வங்கி என்று ஆங்கிலத்தில் இருப்பதை பார்த்து சந்தேகம் அடைந்த கடைக்காரர் எட்டயபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

Advertisment

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மது போதையில் இருந்த அவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் அவரிடம் இருந்த ரூ.500 நோட்டுக்களை பறிமுதல் செய்தனர். அப்போது தங்கள் ஹோட்டலில் பணிபுரிந்து வரும் சைனீஸ் மாஸ்டர் குமார் சர்மாவிடம் இது போன்ற பணம் இருப்பதாக சரவணன் கூறியதை தொடர்ந்து போலீசார் அவரிடமிருந்த 67 எண்ணிக்கையிலான ரூ.500 போலி நோட்டுகளை பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அது திரைப்படம் மற்றும் குழந்தைகள் விளையாடுவதற்கு பயன்படுத்தக்கூடிய டம்மி ரூபாய் நோட்டுகள் என்பது தெரியவந்தது. முதலில் கள்ள நோட்டு என்று நினைத்த போலீசாருக்கு அது டம்மி ரூபாய் நோட்டுகள் என்பது தெரிய வந்தது. இந்த டம்மி ரூபாய் நோட்டுகள் எங்கிருந்து வந்தது?, இதை வைத்து இருவரும் வேறு எங்காவது பொருட்கள் வாங்கியுள்ளார்களா? இதை புழக்கத்தில் விட்டு உள்ளார்களா என்பது குறித்தும் இருவரிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த டம்மி போலி நோட்டு சம்பவம் எட்டயபுரம் பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.

Advertisment