கரூர் விஜய் பிரச்சாரக்கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலால் 41 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு மாநில அரசு அமைத்த விசாரணை ஆணையத்தை மீறி விஜய் தரப்பு சிபிஐ விசாரணை கேட்டதால் முன்னாள் குஜராத் நீதிபதி தலைமையில் சிபிஐ விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது. இதற்கு விஜய் தரப்பினர் நீதி வெல்லும் என கூறி வருகிறார்கள். இதில் சென்னை உயர்நீதிமன்றம் அமைத்த சிறப்பு புலனாய்வுக்குழுவின் தலைமையான அஸ்ரா கார்க் குறித்தும், உச்சநீதிமன்றத்தின் உத்தரவுபடி சிபிஐ விசாரணையை மேற்பார்வை செய்யும் நீதிபதி அஜாய் ரஸ்தோகி குறித்தும் ஒப்பீடுகள் அலசப்படுகிறது.
அஸ்ரா கார்க் கடந்த 2012-ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தார். அப்போது இவரிடம் தன் கணவனையே கொலை செய்ததாக பெண் ஒருவரை விசாரணைக்கு அழைத்து வந்துள்ளனர். அப்போது அந்தப்பெண் கூனிக்குறுகி அனைத்து ஆண்கள் மத்தியிலும் வாய் பேச முடியாத நிலையில் இருந்துள்ளார். அவரை எஸ்.பி ஆசுவாசப்படுத்திய பிறகு எதற்கு கணவரை கொலை செய்தாய் என விசாரித்த போது அந்த பெண் கணவர் முழு குடிபோதையில் வீட்டுக்கு வந்து தன்னை வயது வந்த மகளின் முன்பே பாலியல் உறவுக்கு அழைத்ததாகவும் தான் மறுத்ததால் தன்னை விட்டுவிட்டு பெற்ற மகளையே வன்கொடுமை செய்ய முயன்றதாகவும், இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த நான் என்ன செய்வது என்று தெரியாமல் வீட்டில் இருந்த கிரிக்கெட் மட்டையை எடுத்து கணவனின் தலையில் அடித்ததாக கூறியுள்ளார். இந்த தகவலை எஸ்.பி முழுமையாக ஆய்வு செய்த பிறகு தன் கணவன் தன் மகளையே பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தும் அவலத்தை உணர்ந்து தன் மகளை பாதுகாக்க ஒரு தாய் எடுத்த தற்காப்பு நடவடிக்கை என்பதை அவர் புரிந்து அடுத்த நிமிடமே அந்த பெண்ணை ஐபிசி 100 சட்டப்பிரிவை பயன்படுத்தி விடுதலை செய்தார். இதனை மிகத் துணிச்சலான நடவடிக்கை என அனைவராலும் பாராட்டப்பட்டார். இவர் தலைமையில் தான் கரூர் கூட்ட நெரிசல் மரணங்களை ஆய்வு செய்ய சிறப்பு புலனாய்வு குழு அமைத்து சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/10/16/a5539-2025-10-16-19-17-06.jpg)
2002 ஆம் ஆண்டு குஜராத் கலவரத்தின் போது பில்கிஸ்பானு என்ற 21 வயது நிரம்பிய ஐந்து மாத பெண் கர்ப்பிணி தன் 3 வயது மகள் மற்றும் 20 உறவினர்களுடன் கலவரக்காரர்களிடமிருந்து தப்பிக்க தன் சொந்த ஊரை விட்டு வெளியேறி சப்பர்வாட் என்ற இடத்தில் இருக்கும் போது 20 பேர் கொண்ட கலவர கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் அங்கிருந்து ஆண்களை எல்லாம் கொன்று விட்டு பெண்கள் அனைவரையும் வன்கொடுமை செய்தனர். கடைசியாக அவர்கள் பில்கிஸ் பானுவிடம் வரும்போது தான் கர்ப்பிணியாக இருப்பதால் தன்னை விடும்படி கெஞ்சுகிறார். மிருகத்தனமாக வெறிகொண்ட அந்த கும்பல் அங்கேயே அவரை கொடூரமாக வன்கொடுமை செய்துள்ளனர். அப்போது அவரது 3 வயது குழந்தை அழுததால் 2 கால்களையும் பிடித்து தூக்கி தரையில் அடித்துக் கொன்றுள்ளனர். இதைக் கண்டு மயங்கிய பில்கிஸ்பானு இறந்து விட்டார் என்று விட்டுவிட்டு ஓடி விட்டனர். பல்லாண்டு கால தீவிர சட்ட போராட்டத்திற்கு பின் இதில் சம்பந்தப்பட்ட 11 பேருக்கு சிறப்பு நீதிமன்றம் ஆயுள் சிறை தண்டனை விதித்தது. 2022ல் தங்களது தண்டனையை குறைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் முறையிடுகின்றனர்.
இதனை விசாரித்த நீதிபதி அஜாய் ரஸ்தோகி அந்த முறையிட்டை அப்படியே ஏற்று அவர்கள் தண்டனையை குறைக்குமாறு குஜராத் அரசுக்கு உத்தரவிடுகிறார். அதனை ஏற்று அனைவரும் விடுதலை செய்யப்படுகின்றனர். பின் பல போராட்டங்கள் உள்ளிட்ட சட்ட போராட்டங்களுக்குப் பிறகு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர். கொடூர கொலை, பாலியல் வன்கொடுமைக்கு தண்டனையை குறைக்க சொல்லி உத்தரவிட்ட நீதிபதி தான் தற்போது கரூரில் நெரிசல் மரணங்களை ஆய்வு செய்யும் சிபிஐ குழுவை மேற்பார்வை செய்ய உச்சநீதிமன்றம் நியமித்திருக்கிறது.
உச்சநீதிமன்ற தீர்ப்பினால் நன்மை நடக்கும் என்று நடக்குமா? வழக்கு சிபிஐக்கு மாற்றிய பிறகு விஜய் உட்பட அவரது ஆதரவாளர்கள் நீதி வெல்லும் என்று கூறி வருகிறார்கள். அதற்கு பின்னணியில் இருக்கும் அஜாய் ரஸ்தோகியின் அபாயம் புரிந்தால் சரி என்கிறார்கள் சம்பவத்தை அறிந்தவர்கள்.