Asaduddin Owaisi alliance with 2 parties in Bihar assembly election
பீகார் மாநில சட்டசபையின் பதவிக்காலம் வரும் நவம்பர் 22 ஆம் தேதியுடன் நிறைவு பெறுவதையடுத்து, அம்மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 243 தொகுதிகள் கொண்ட பீகார் சட்டமன்றத்திற்கு நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது.
ஆளும் கட்சியான ஐக்கிய ஜனதா தளம் - பாஜக அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி, தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரிய ஜனதா தளம்-காங்கிரஸ் அடங்கிய மகாகத்பந்தன் கூட்டணி மற்றும் தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி என்று பீகார் தேர்தல் களத்தில் தற்போது மும்முனைப் போட்டி நிலவி வருகிறது. இதனிடையே ஐக்கிய ஜனதா தளம், பாஜக ஆகிய கட்சிகள், தனது கூட்டணி கட்சிகளிடம் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வேட்பாளர்களை அறிவித்து அறிவித்து வருகின்றன. திர்கட்சியான மகாகத்பந்தன் கூட்டணியில் நடைபெற்று வரும் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருவதால் வேட்பாளர் பட்டியலை அறிவிக்க தாமதம் ஏற்பட்டுள்ளது. புதிதாக களமிறங்கிய ஜன் சுராஜ் கட்சி, அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவதாகக் கூறி வேட்பாளர்களை அறிவித்து வருகிறது.
இந்த நிலையில், அகில இந்திய மஜ்லிஸ்-இ-இடிஹதுல் முஸ்லிமின் கட்சியின் தலைவரும் ஹைதராபாத் நாடாளுமன்ற உறுப்பினருமான அசாதுதீன் ஓவைசி, பீகார் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளார். ஏற்கெனவே, பீகார் தேர்தலில் தனது கட்சிக்கு 100 இடங்களை ஒதுக்கினால் இந்தியா கூட்டணிக்கு வரத் தயார் என ஓவைசி தெரிவித்திருந்தார். ஆனால், இந்தியா கூட்டணியில் இருந்து எந்தவித தகவலும் வராததால், 100 இடங்களிலும் தனித்து போட்டியிடுவதாக அவர் அறிவித்தார். இது குறித்து கூறிய அவர், “தேர்தலுக்கு முன்னதாக ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் மற்றும் தேஜஸ்வி யாதவ் ஆகியோருடன் கூட்டணி அமைக்க நாங்கள் முயன்றோம். ஆனால் எந்த பதிலும் கிடைக்கவில்லை. பீகாரில் எங்கள் கால்தடங்களை பதிய நாங்கள் எங்களால் இயன்ற அனைத்தையும் செய்ய வேண்டும். மூன்றாவது அணி அமைப்பது குறித்து ஒத்தக் கருத்துடைய கட்சிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறோம்” என்று கூறினார்.
இந்த சூழலில், பீ்கார் தேர்தல் கணக்கீட்டை மாற்றக்கூடிய வகையில் அசாதுதீன் ஓவைசியின் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இடிஹதுல் முஸ்லிமின் கட்சி, பீகார் சட்டமன்றத் தேர்தலுக்காக சந்திரசேகர் ஆசாத்தின் ஆசாத் சமாஜ் கட்சி மற்றும் சுவாமி பிரசாத் மெளரியாவின் அப்னி ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளதாக அறிவித்துள்ளது. அகில இந்திய மஜ்லிஸ்-இ-இடிஹதுல் முஸ்லிமின் கட்சி 35 இடங்களிலும் ஆசாத் சமாஜ் கட்சி 25 இடங்களிலும், அப்னி ஜனதா கட்சி நான்கு இடங்களிலும் போட்டியிடும் போட்டியிடப்போவதாக தெரிவித்துள்ளது.
Follow Us