குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜக்தீப் தன்கர் கடந்த ஜூலை 21ஆம் தேதி ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து அடுத்த குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் வரும் செப்டம்பர் 9ஆம் தேதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான வேட்பாளராக தமிழகத்தைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டார். எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி சார்பில் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி பி. சுதர்சன் ரெட்டி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
நாடாளுமன்ற இரு அவையிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மொத்தம் 426 எம்.பிக்கள் உள்ளதால் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. அதனால் அவருக்கு தற்போதில் இருந்தே வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இருப்பினும், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என பா.ஜ.க வலியுறுத்தி வருகிறது. ஒருபக்கம் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு தர வேண்டும் என்று தேசிய ஜனநாயகக் கூட்டணியும், மறுபுறம் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டிக்கு ஆதரவு தர வேண்டும் என இந்தியா கூட்டணியும் மற்ற கட்சிகளுக்கு வேண்டுகோள் விடுத்து வருகிறது.
இந்த நிலையில், இந்தியா கூட்டணியின் குடியரசு துணை வேட்பாளர் சுதர்சன் ரெட்டிக்கு ஆதரவு தரவுள்ளதாக இந்தியா கூட்டணியில் இருந்து விலகிய ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இந்தியா கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளரும், முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியுமான சுதர்சன் ரெட்டியை, அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியில் உள்ள தனது வீட்டில் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, காங்கிரஸ் எம்.பிக்கள் பிரமோத் திவாரி, சையத் நசீர் உசேன், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி கல்யாண் பானர்ஜி உள்ளிட்டோர் இருந்தனர். அவர்களுடன் அரவிந்த் கெஜ்ரிவால் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், “எதிர்க்கட்சிகளின் துணை ஜனாதிபதி வேட்பாளரான முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டியை, ஆம் ஆத்மி கட்சி ஆதரிக்கிறது. நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து நாங்கள் விவாதித்தோம். மற்ற எதிர்க்கட்சித் தலைவர்களும் வந்தனர். தேர்தல் உத்திகள் குறித்தும் நாங்கள் விவாதித்தோம். சுதர்சன் ரெட்டியை வெற்றிப் பெற செய்ய முயற்சிப்போம். இந்த தேர்தல் ரகசிய வாக்கெடுப்பு மூலம் நடத்தப்படுகிறது. ஒரு கொறடா இல்லை, எனவே ஒரு நீதிபதியாக அவரது வாழ்க்கை சிறப்பாக இருந்தது என்பதை அனைத்து கட்சிகளுக்கும் நான் சொல்ல விரும்புகிறேன். அவர் எந்த பயமும் இல்லாமல் பெரிய முடிவுகளை எடுத்துள்ளார். அதனால் அத்தகைய நபர், அந்த நாற்காலியின் மரியாதையை அதிகரிப்பார். எனவே அவர் நாட்டின் வேட்பாளர் என்று நான் கூறுவேன்” என்று கூறினார்.
முன்னதாக மக்களவைத் தேர்தல், டெல்லி தேர்தல், மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா தேர்தல் ஆகிய தேர்தல்களில் இந்தியா கூட்டணி தொடர் தோல்வியினாலும், காங்கிரஸுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாகவும் இந்தியா கூட்டணியில் இருந்து அதிகாரப்பூர்வமாக ஆம் ஆத்மி கட்சி விலகியது என்பது குறிப்பிடத்தக்கது.