“காங்கிரஸுடன் எந்த கூட்டணியும் இல்லை” - அடித்து சொன்ன அரவிந்த் கெஜ்ரிவால்

arvindkejriwal

Arvind Kejriwal said There is no alliance with Congress

கடந்த பிப்ரவரி மாதத்தில் டெல்லியில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், ஆம் ஆத்மி அரசை வீழ்த்தி பா.ஜ.க வெற்றி பெற்றது. இந்த தேர்தலில், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷி சிசோடியா உள்ளிட்ட மூத்த தலைவர்கள் இந்த தேர்தலில் தோல்வி அடைந்தனர். கடந்த 10 ஆண்டுகளாக டெல்லியை ஆட்சி செய்த ஆம் ஆத்மி, இந்த தேர்தலில் படுதோல்வியை சந்தித்தது என்பது அக்கட்சியினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இந்த சூழ்நிலையில், பஞ்சாப், மேற்கு வங்கம், கேரளா, குஜராத் ஆகிய 4 மாநிலங்களில் உள்ள 5 தொகுதிகளுக்கு சமீபத்தில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலில், பஞ்சாப்பின் லூதியானா தொகுதியிலும், குஜராத்தின் விஸாவதர் தொகுதியிலும் ஆம் ஆத்மி வெற்றி பெற்றிருந்தது. மக்களவைத் தேர்தல், டெல்லி சட்டமன்றத் தேர்தல் என தொடர் தோல்வியால் பின்னடைவை சந்தித்த ஆம் ஆத்மிக்கு, இடைத்தேர்தலில் பெற்ற வெற்றி என்பது உத்வேகத்தை கொடுத்துள்ளது. இதே உத்வேகத்துடன், இந்தாண்டில் நடக்கும் பீகார் சட்டமன்றத் தேர்தலிலும், 2027இல் குஜராத்தில் நடக்கும் சட்டமன்றத் தேர்தலிலும் கவனம் செலுத்த அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி முடிவு செய்துள்ளது. 

இதன் தொடர்ச்சியாக, குஜராத் மாநிலத்தில் கட்சியின் உறுப்பினர் சேர்க்கையைத் தொடங்க மூன்று நாள் பயணமாக ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் அம்மாநிலத்திற்குச் சென்றுள்ளார். அங்கு அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியதாவது, “இந்தியா கூட்டணி என்பது மக்களவைத் தேர்தலுக்காக மட்டுமே அமைக்கப்பட்டது. தற்போது எங்கள் தரப்பில் இருந்து எந்த கூட்டணியும் இல்லை. காங்கிரஸுடனும் எங்களுக்கு எந்த கூட்டணியும் இல்லை. ஒருவேளை ஏதாவது கூட்டணி இருந்தால் அவர்கள் ஏன் விஸாவதர் தொகுதியில் போட்டியிட்டார்கள்?. அவர்கள் எங்களை தோற்கடிக்க வந்தார்கள். எங்கள் வாக்குகளை பிரித்து ஆம் ஆத்மி கட்சியை தோற்கடிப்பதற்காக பா.ஜ.க காங்கிரஸை அனுப்பியிருக்கிறது.

நாங்கள் பா.ஜ.கவை தோற்கடிக்க விரும்புகிறோம், ஆனால் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று மக்கள் கேட்கிறார்கள். ஏனென்றால், பா.ஜ.கவின் பாக்கெட்டில் காங்கிரஸ் இருக்கிறது என்று அனைவருக்கும் தெரியும். குஜராத்தில் உள்ள ஒவ்வொரு பிரிவினரும் பா.ஜ.க மீது அதிருப்தியடைந்துள்ளனர். வேலையின்மை இருந்தாலும், பாதிக்கும் மேற்பட்ட பதவிகள் காலியாக உள்ளன. வேலைகள் ஒப்பந்த அடிப்படையில் மட்டுமே வழங்கப்படுகின்றன. மக்களுக்கு வேறு வழியில்லை என்பதால் மக்கள் இன்னும் பா.ஜ.கவுக்கு வாக்களிக்கிறார்கள். தேர்தலில் பாஜக வெற்றி பெற உதவும் ஒப்பந்தத்தை காங்கிரசுக்கு வழங்கியுள்ளது” என்று கூறினார்.

கடந்த மக்களவை தேர்தலில், பா.ஜ.கவை வீழ்த்துவதற்காக 2023 ஆண்டில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியை உருவாக்கின. இந்த இந்தியா கூட்டணியில், காங்கிரஸ், ஆம் ஆத்மி, தி.மு.க, திரிணாமுல் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, தேசிய மாநாட்டு கட்சி (என்.சி), மக்கள் ஜனநாயகக் கட்சி (பி.டி.பி), சமாஜ்வாதி கட்சி, உத்தவ் தாக்கரேவின் சிவசேனா, சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றன. ஆரம்பக் கட்டத்தில் இந்த கூட்டணிக்கு மக்களிடம் இருந்து பெரும் ஆதரவு இருந்த நிலையில், இந்தியா கூட்டணி உருவாக காரணமாக இருந்த ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ் குமார் கூட்டணியில் இருந்து விலகி பா.ஜ.க கூட்டணியில் சேர்ந்தார். அதன் பிறகு, பல கட்டங்களாக கூட்டங்கள் நடத்தி இந்தியா கூட்டணி மக்களவைத் தேர்தலை சந்தித்தது. ஆனால், அந்த தேர்தலில் இந்தியா கூட்டணி தோல்வியைச் சந்தித்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

Aam aadmi Arvind Kejriwal congress INDIA alliance
இதையும் படியுங்கள்
Subscribe