தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நேற்று (27.09.2025) கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். இதற்காக அதிகமான மக்கள் அங்குக் கூடியதால் கடும் நெரிசல், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் பலர் மயக்கமடைந்த நிலையில் 40 பேர் உயிரிழந்தனர். இந்தச்சம்பவம் தேசிய அளவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே இந்த துயரச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையத்தை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் அருணா ஜெகதீசன் சம்பவ இடத்தில் (வேலுசாமிபுரம்) இன்று (28.09.2025) மாலை 5 மணியளவில் தனது முதற்கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளார். அவருடன் காவல்துறை அதிகாரிகளும் உடன் உள்ளனர். அவர்களிடம் இந்த சம்பவம் பற்றியும், அதன் விவரங்கள் குறித்தும் நீதிபதி அருணா ஜெகதீசன் கேட்டறிந்து வருகிறார். முன்னதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று இரவு செய்தியாளர்களைச் சந்திக்கும் போது அருணா ஜெகதீசன் ஆணையம் அளிக்கும் அறிக்கையின்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையில் சம்பவ இடத்தில் அருணா ஜெகதீசன் காவல்துறை அதிகாரிகளுடன் விசாரணை தொடர்பான ஆய்வை மேற்கொண்டார்.
இதன் ஒரு பகுதியாக விஜய் கரூருக்கு வருகை தந்த வழித்தடம் முதல் சம்பவங்கள் நிகழ்ந்தது வரையிலான விவரங்களை எல்லாம் அவர் சேகரிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இது குறித்து தமிழக அரசுக்கு அவர் விரிவான அறிக்கையை அளிக்க உள்ளார். அந்த அறிக்கையின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து இந்த விசாரணை நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. எங்கெல்லாம் பிரச்சினை நிலவியது? சம்பவம் நடந்த இடம் குறுகலான சாலையா?. காவல்துறையினர் விதித்த நிபந்தனைகள் என்ன?. அதனை த.வெ.க.வினர் பின்பற்றவில்லையா என்பது குறித்தும் அருணா ஜெகதீசன் காவல்துறை அதிகாரிகளிடம் முதல் கட்டமாக விசாரிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
விஜய்க்கு வரவேற்பு அளிக்கப்பட்ட பகுதியில் காவல்துறையினர் எவ்வளவு பேர் பாதுகாப்பு பணிகளில் இருந்தார்கள் என்கிற விவரங்களை எல்லாம் காவல்துறை அதிகாரிகளிடம் முதற்கட்டமாக விசாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து இது குறித்து த.வெ.க.வினரிடம் விசாரணை நடத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த ஆணையத்தின் விசாரணை அறிக்கையின் அடிப்படையில் தமிழக அரசின் அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/09/28/karur-aruna-jagadesan-visit-2025-09-28-19-12-43.jpg)