சோழர்கால ஆறுமுகம், தவ்வை, நந்தி போன்ற சிற்பங்கள், கற்றளி கட்டுமானம் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் உள்ளூர் மக்களும் சிவனடியார்களும் சிலைகளை வைத்து வழிபாடு செய்வதற்கு ஆயத்தமாக கற்றளியில் குவிந்து கிடந்த காய்ந்த இலைச்சருகுகள் சுத்தம் செய்த போது சிவலிங்கம் வெளிப்பட்டு ஆச்சரியத்தையும் இன்ப அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் வட்டம் செனையக்குடியில் சோழர் கால கலைப் பாணியிலான சைவம், வைணவம், சமணம் என மூன்று மாதங்களுக்கு உரிய சிற்பங்கள் புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகத்தின் நிறுவனர் ஆ. மணிகண்டன் தலைவர், மேலப்பனையூர் கரு. ராஜேந்திரன் ஆகியோர் தலைமையிலான களஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இங்கு சிவன் கோவில்தான் இருந்தது என்பதை வெளிப்படுத்தும் விதத்தில் சிவலிங்கம் வெளிப்பட்டிருப்பது உள்ளூர் மக்களுக்கும் பொதுமக்களுக்கும் வழிபாடு செய்தவர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக தொல்லியல்துறை ஆய்வாளர் மங்கனூர் ஆ. மணிகண்டன் கூறியதாவது, ''புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகத்தின் தலைவர் கரு ராஜேந்திரன் அவர்களால் கண்டுபிடிக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. செனையக்குடி மடை கல்வெட்டில் இவ் ஊரின் பெயர் தானையிக்குடி என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக பிற்காலத்திய கல்வெட்டுகளில் சேனையக்குடி என்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சேனையக்குடி என்ற பெயர்தான் பின்னாளில் செனையக்குடி என்று மருவியுள்ளது. இங்கிருந்த "சிவன் கோவில் அருண்மொழீஸ்வரம்" இன்று ராஜ ராஜனின் பெயரால் அழைக்கப்பட்டுள்ளது என்பது கல்வெட்டுச் சான்றுகள் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. எனவே ராஜராஜன் பெயரில் இருந்த சிவன் கோவில்தான் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள லிங்கத்துடன் கூடிய சிவன் கோயில் என்பதை உறுதி செய்ய முடிகிறது.
இந்த கோவில் கட்டுமானம், சிற்பங்கள் உள்ளிட்ட அவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது பன்னிரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம்''என்றார்.
வழிபாட்டின் போது "அன்பு தானே எல்லாம் சேது அறக்கட்டளை " குழுவினர் செனையக்குடி ஊர்த்தலைவர் மாரியப்பன், தொல்லியல் ஆர்வலர் சிவனடியார் மாரிமுத்து, கிராம உதவியாளர் மாரிமுத்து, முருகேசன், பெரண்டையாப்பட்டி, திருநாவுக்கரசு,வாசுதேவன், செனையக்குடி மணிகண்டன்,மணி, பாலசுப்பிரமணியம், திலீப், முருகானந்தம், வெள்ளைச்சாமி, பிரகாஷ் உள்ளிட்ட நூற்றுக்கு மேற்பட்ட இளைஞர்கள், சிவனடியார்கள் பொதுமக்கள் இந்த உழவாரப்பணியை மேற்கொண்டனர்.