பா.ம.கவில் ராமதாஸுக்கும், அன்புமணிக்கும் இடையிலான மோதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கட்சியின் சின்னம் மற்றும் பெயரை அன்புமணி பயன்படுத்தக் கூடாது என ராமதாஸ் தொடர்ந்து தெரிவித்து வருகிறார். ஆனால், தனது தலைமையிலான பா.ம.க தான் உண்மையான பா.ம.க என அன்புமணி பிரகடனப்படுத்தி கட்சியின் சின்னம் மற்றும் பெயரை தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார். இதனால், கட்சியில் உட்கட்சி மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து உச்சகட்டத்தை எட்டி வருகிறது.

Advertisment

இந்த நிலையில், பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தலைமையில் சேலத்தில்  பா.ம.க செயற்குழு, பொதுக்குழு கூட்டம் இன்று (29-12-25) நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு செயற்குழு உறுப்பினர்கள் 650 பேர், பொதுக்குழு உறுப்பினர்கள் 4,300 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.

Advertisment

இந்த கூட்டத்தில் பேசிய பா.ம.க எம்.எல்.ஏ அருள், “ஒரு கட்சியின் தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கும் ஒரு தலைவர் எப்படி இருக்கக் கூடாது என்பதற்கும் பா.ம.க தான் உதாரணம். 46 ஆண்டுகாலம் மக்களுக்காக வாழ்ந்து போராளியாக வாழ்ந்து கொண்டிருப்பவர் நமது தலைவர் ராமதாஸ். அப்படிப்பட்டவருக்கு, கடந்த 2 ஆண்டுகளில் மன உளைச்சல் ஏற்பட்டிருக்கிறது. இந்த மன உளைச்சலுக்கு யார் காரணம்? ராமதாஸ் முடிவு எடுக்கும் வரையில், பா.ம.க அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக இருந்தது. ராமதாஸ் என்ற பெயரை சொன்னாலே, அவர் சொல்வதை மட்டுமே கேட்க வேண்டிய கட்டாயமாக இருந்தது. அந்த நிலையை, இன்றைக்கு சிறு அளவிற்கு மாற்றுவதற்கு ஒரு கூட்டம் முயற்சிக்கிறது. அதற்கு யார் காரணம்? ராமதாஸால் அடையாளம் காணப்பட்டு எம்.பி பதவி உள்ளிட்ட பதவிகளை கொடுத்து அழகு பார்க்கப்பட்ட அன்புமணி தான் அதற்கு காரணம்.

இன்றைக்கு தமிழ்நாட்டு பெண்கள் எல்லோரும் கதறி அழுது துடிக்கின்றனர். ஆனால், ராமதாஸ் பெற்றெடுத்த பிள்ளை மகிழ்ந்து கொண்டிருக்கிறது. நீங்கள் என்ன தியாகம் செய்திருக்கிறீர்கள்? என்ன சாதனை செய்திருக்கிறீர்கள்?. எத்தனை முறை சிறைக்கு சென்றிருக்கிறீர்கள்? சிறையே காணாத உங்களுக்கு எத்தனை பதவிகளை வாரி கொடுத்தார். அப்படிபட்ட தந்தை, இந்த உலகத்தில் யாருக்கு கிடைப்பார்? இது மாதிரியான தந்தை யாருக்குமே கிடைக்க மாட்டார்கள். அதை இழந்துவிட்டீர்களே? நீங்கள் எங்களை வழிகாட்டுவீர்கள் என்று உங்களை சின்ன அய்யா என்று சொன்னோம். ஆனால், அனைவரின் தலையிலும் மண்ணை அள்ளி போட்டுவிட்டீர்கள்.

Advertisment

ராமதாஸுக்கு மட்டும் வயிறு எரியவில்லை, தமிழ்நாட்டில் பிறந்த ஒரு ஒரு அப்பாவுக்கும், ஒரு ஒரு அம்மாவுக்கும் வயிறு எரியுது. ராமதாஸுக்கும், அன்புமணிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்ட போது ராமதாஸ் 10 சதவீதத்தில் இருந்து ஆரம்பித்தார், அன்புமணி 90 சதவீதத்தில் இருந்து ஆரம்பித்தார். ஆனால் நாளுக்கு நாள் முன்னேறி ராமதாஸ் 90 சதவீதத்தில் நிற்கிறார், அன்புமணி இன்றைக்கு 10 சதவீதத்துக்கு வந்துவிட்டார். இந்த தேர்தலுக்கு பிறகு அவர் ஜீரோ ஆகிவிடுவார்” என்று ஆவேசமாகப் பேசினார்.