பாமகவின் நிறுவனர் ராமதாஸுக்கும், அவரது மகன் அன்புமணி ராமதாஸுக்கும் இடையே அதிகார மோதல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நிலையில் பாமக 2 அணியாகப் பிளவுபடும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் நடைபெற்ற பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகும் தீர்வு எட்டப்படாத சூழலே நீடிக்கிறது. பாமகவில் நிர்வாகிகளுக்கு முக்கியப் பொறுப்புகளை ராமதாஸ் வழங்கி வருகிறார். 

ராமதாஸின் தீவிர ஆதரவாளராக இருந்து வரும் எம்எல்ஏ அருள் சேலத்தில் அன்புமணி தலைமையில் நடைபெற்ற பொதுக்குழுவில் புறக்கணிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. அதனைத் தொடர்ந்து பாமகவின் மாவட்ட பொறுப்பில் இருந்து அருளை அன்புமணி நீக்கி உத்தரவிட்டிருந்தார். அந்த நேரத்தில் பாமக எல்.எல்.ஏக்கள் அருள், ஜி.கே.மணி ஆகியோர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்ந்தனர். அதேநேரம் அருளை கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக ராமதாஸ் அறிவித்திருந்தார். என்னால் நியமிக்கப்பட்டவர்கள் தான் அதிகாரம் மிக்கவர்கள் எனவும் ராமதாஸ் தெரிவித்திருந்தார்.

தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் அருள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வந்தார். ''ஜி.கே.மணி போன்றவர்கள், எங்களைப் போன்றவர்கள், கட்சியினுடைய தொண்டர்கள் என அனைவரும் சேர்ந்து இந்த சமுதாயத்தையும், இந்த மக்களையும் வழிநடத்த ஒரு தலைவர் வேண்டும் என அன்புமணிக்கு தலைவர் பதவியை கொடுங்கள் என ரத்த கையெழுத்து போட்டுக் கொடுத்தோம். ரத்த கையெழுத்து போட்டதற்கான நகல் எங்களிடம் இருக்கிறது. எங்களை கொலைகாரன், கொள்ளைக்காரன் இலந்தை பழம் விற்பவர்கள் என்று சொல்கிறாரே அன்புமணி ராமதாஸ்.

அன்புமணி ராமதாஸ் உடன் 27 ஆண்டுகளாக தமிழகம் முழுவதும் சுற்றி இருக்கிறேன். என்னுடைய கார்  மைக் செட் கட்டிக் கொண்டு முதலில் போகும். அன்புமணி ராமதாஸ் பின்னால் வரும் காரில் வருவார். 'வருகிறார்... வருகிறார்.. ராமதாஸின் மகன் வருகிறார்' என ஒவ்வொரு இடத்திற்கும் கூட்டிச் செல்வோம். அவர் நல்லவர் ஆனால் சிலருடைய பேச்சைக் கேட்டு இப்படி நடந்து கொள்கிறார்' என ஆதங்கம் தெரிவித்திருந்தார் அருள்.

Advertisment

A24
Arul MLA Removed from PMK Photograph: (pmk)

Advertisment

இந்நிலையில் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக பாமகவின் அடிப்படை உறுப்பினர் பதவி உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அருளை நீக்குவதாக அன்புமணி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 'ஒழுங்கு நடவடிக்கைக் குழு கொடுத்த புகார் அடிப்படையில் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருடன் பாமகவினர் யாரும் தொடர்பு வைத்துக்கொள்ளக்கூடாது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பு பாமக எம்.எல்.ஏவை கட்சியில் இருந்து அன்புமணி நீக்கி இருப்பது பாமக அரசியல் வட்டாரத்தில் மீண்டும் அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.