திருவண்ணாமலை மாவட்டம், செய்யூர் வட்டத்திலுள்ள அனக்காவூர் கிராமத்திலுள்ள ஏரியில் பாறை மேட்டில் சகதியுடன் காணப்படும் சமண மதத்தின் அருகர் சிற்பத்தை அகிம்சை நடை விழிப்புணர்வு அமைப்பின் நிறுவனரும், சமண ஆய்வாளருமான பேரணி ஸ்ரீதரன் அப்பாண்டைராஜ் கண்டுபிடித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது “திருவண்ணாமலை மாவட்டத்தின் மூன்றாவது பெரிய ஏரியாகக் கருதப்படும் அனக்காவூர் ஏரியில் சகதியுடன் நீரில் மூழ்கியிருந்த சிற்பம் நீர் வற்றிய நிலையில் தெரிந்தது. இதையடுத்து அவ்விடத்திற்குச் சென்று அடையாளங்காணப்பட்ட அருகர் சிற்பம் பதினொன்றாம் நூற்றாண்டு காலத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம். தற்போதும் இந்தச் சிற்பம் சேறும் சகதியும் காய்ந்து இருப்பதால் துல்லியமாகக் காண்பது முடியாமல் உள்ளது. கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்பு ஏரி தூர் வாரும் பணியின் போது, அகழ்வு இயந்திரத்தின் துணையுடன் கீழே இருந்த திருமேனி பாறையின் மீது எடுத்து வைக்கப்பட்டதாக அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர். இந்தச் சிற்பத்தை அந்தப் பகுதி மக்களால் ஊரின் எல்லைச் சாமியாகவும், நொண்டி வெள்ளாயச்சாமி என்று பல பெயர்களில் அழைக்கப்படுகிறது.
சிற்பத்தின் தோற்றம்: சிற்பம் அர்த்த பரியங்காசனத்துடன் தியான நிலையில் இருபுறமும் சாமரம் வீசுவோர் நின்றிருக்க, தலையின் பின்னணியில் பிரபாவளி எனும் ஒளிச்சுடரும், மேற்பகுதி சிதைத்த முக்குடையும், சுருண்ட அசோக மரத்தின் கிளைகளும் பின்புலமாக செதுக்கப்பட்டுள்ளது” என்றார்.