நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் தனியாருக்குச் சொந்தமான கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள விடுதியில் உணவு சாப்பிட்ட மாணவ மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் போன்ற உடல் உபாதைகள் ஏற்பட்டது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியிருந்தது. அதே சமயம் பாதிக்கப்பட்ட மாணவர்கள் சிலர் இறந்து விட்டதாக தவறான தகவல்களை சமூக வலைத்தளத்தில் பரப்பினர். இதன் மூலம் சமூகத்தில் பதற்றத்தையும் மற்றும் சட்ட ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தும் வகையில் எக்ஸ் வலைதலங்களில் தவறான தகவல்களை பதிவேற்றம் செய்தாக கிடைக்கப்பெற்ற புகாரின் பேரில், குமாரபாளையம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யபட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
மேலும் இதுபோன்று சமூக வலைதளங்களில் தவறான தகவல் பதிவேற்றம் செய்வோர் மீது சட்ட ரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என நாமக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக எச்சரிக்கப்பட்டது. இந்நிலையில் சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்பிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக நாமக்கல் மாவட்ட காவல் துறை வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு உட்கோட்டம், குமாரபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எக்ஸல் குழும கல்வி நிறுவனங்களில் மாணவ மாணவிகள் விடுதிகளில் தங்கி படித்து வருகின்றனர்.
இந்நிலையில் 27.10.2025 (திங்கட்கிழமை) காலை சில மாணவர்கள் வயிற்றுப் போக்கு மற்றும் வாந்தி போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டு அவர்களில் சில மாணவர்கள் எக்செல் கல்லூரி மருத்துவ மையம் மற்றும் குமாரபாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் புறநோயாளிகளாக (OP) சிகிச்சை பெற்று உடல்நிலை சீரானதை தொடர்ந்து அவர்கள் அனைவரும் கல்லூரி விடுமுறையை தொடர்ந்து தங்களது சொந்த ஊருக்கு விடுமுறையில் சென்றுவிட்டனர். மாணவர்கள் அனைவரும் உடல்நலத்துடன் உள்ள நிலையில் மாணவர்கள் சிலர் இறந்துவிட்டதாக சமூக விரோதிகள் சிலர் சமூகத்தில் பதற்றத்தையும் மற்றும் சட்ட ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதலங்களில் தவறான தகவல்களை பதிவேற்றம் செய்துள்ளனர்.
இது தொடர்பாக கிடைக்கப்பெற்ற புகாரின் பேரில், குமாரபாளையம் காவல் நிலையத்தில் வழக்குகள் பதிவு செய்யபட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் இவ்வாறு தவறான தகவல்களை சமூக வலைதளத்தில் பரப்பிய திருச்சி மாநகரம், தென்னூரைச் சேர்ந்த கார்த்திக்குமார் (வயது 28) என்பவர் நேற்று (01.11.2025) கைது செய்யப்பட்டடு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளார். மேலும் இதுபோன்று சமூக வலைதளங்களில் தவறான தகவல் பதிவேற்றம் செய்வோர் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவர்கள் மீது சட்ட ரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்ப்படும் என நாமக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக எச்சரிக்கப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow Us