வேலூர் மாவட்டம் ​காட்பாடி பிரம்மபுரம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள தனியார் விடுதிகளில் மாணவர்கள் சிலர் போதைப்பொருட்களைப் பயன்படுத்துவதாக மாவட்ட எஸ்.பி. தனிப்பிரிவினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதன்பேரில், சம்பந்தப்பட்ட தனியார் விடுதியில் போலீசார் அதிரடிச் சோதனையில் ஈடுபட்டனர். இந்தச் சோதனையில் மாணவர்களிடமிருந்து ​500 கிராம் கஞ்சா, 53 போதை மாத்திரைகள், 250 மி.லி. கஞ்சா ஆயில் உள்ளிட்ட போதை வஸ்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.
​
போதைப்பொருள் பதுக்கிய வழக்கில் பிரபல தனியார் பல்கலைக்கழக இறுதியாண்டு பயிலும் 7 மாணவர்கள் ​ஆயுஷ் சுக்லா, ​கேசவ், தேவ் சிங், ​ஈஸ்வர் சரண், ஆதர்ஷ், ​ஆதித்ய பிரதான், ஷிபான் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் மீது போதைப்பொருள் தடுப்புச் சட்டம் (NDPS Act) மற்றும் பாரதிய நியாய சன்ஹிதா (BNS) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவர்கள் காட்பாடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, 15 நாள் நீதிமன்றக் காவலில் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும், தலைமறைவாக உள்ள 4 மாணவர்களைப் போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து, கஞ்சா மற்றும் போதைப்பொருள் வைத்திருந்த புகாரில் தொடர்புடைய 10 மாணவர்களைப் பல்கலைக்கழக நிர்வாகம் அதிரடியாக இடைநீக்கம் (Suspension) செய்துள்ளது. இந்தத் துரித நடவடிக்கையில் ஈடுபட்ட காட்பாடி போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன் பாராட்டியுள்ளார்.
Follow Us