Arrest warrant against Minister Durai Murugan - sensational order issued by special court Photograph: (dmk)
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் துரைமுருகனுக்கு எதிராக பிறப்பித்த பிடிவாரண்ட்டை செப்டம்பர் 15 தேதி செயல்படுத்த சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த திமுக ஆட்சியில் 2007-2009 காலத்தில் அமைச்சராக இருந்த துரைமுருகன் வருமானத்திற்கு அதிகமாக 1.40 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புகார் எழுந்திருந்தது. இந்த சொத்துக் குவிப்பு புகார் தொடர்பாக துரைமுருகனுக்கு எதிராக கடந்த 2011 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இதில் துரைமுருகன், அவருடைய மனைவி சாந்தாகுமாரி உள்ளிட்டவர்களை இந்த வழக்கில் இருந்து விடுவித்து வேலூர் நீதிமன்றம் கடந்த 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் உத்தரவிட்டிருந்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை காவல் துறையினர் எம்எல்ஏக்கள், எம்பிக்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இதில் துரைமுருகன், அவருடைய மனைவி சாந்தாகுமாரி உள்ளிட்ட இவருக்கு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில் இன்று (04.09.2025) இந்த வழக்கின் விசாரணையில் துரைமுருகனின் மனைவி சாந்தகுமாரி ஆஜராகி தன் மீதான பிடிவாரண்டை திரும்பபெறக் கோரினார். அவரது கோரிக்கை ஏற்கப்பட்டது. துரைமுருகன் ஆஜராகாத நிலையில் அவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டுள்ள பிடிவாரண்டை செப்.15 ஆம் தேதி அமல்படுத்த வேண்டும் என சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை அன்றைய தேதிக்கே தள்ளிவைத்துள்ளது. முன்கூட்டியே ஆஜராகிவிட்டால் பிடிவாரண்ட் கைதை தவிர்க்க முடியும் என்று கூறப்படுகிறது.