தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கடந்த 27.09.2025 அன்று கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். இதற்காக அதிகமான மக்கள் அங்குக் கூடியதால் கடும் நெரிசல், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் பலர் மயக்கமடைந்த நிலையில் 40 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தேசிய அளவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.
கூட்ட நெரிசலில் காயமடைந்து வேலுச்சாமிபுரத்தைச் சேர்ந்த சுகுணா என்பவர் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளதால் கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 27ஆம் தேதி நடந்த சம்பவத்திற்கு பிறகு வீட்டுக்குள் சென்ற விஜய் 34 மணி நேரத்திற்கு பிறகு இன்று வெளியே வந்துள்ளார். தன்னுடைய நீலாங்கரை வீட்டிலிருந்து பட்டினப்பாக்கம் வீட்டிற்கு அவர் செல்வதாக கூறப்படுகிறது. அங்கிருந்து அவர் கரூர் செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதேநேரம் பாதிக்கப்பட்ட மக்களை காண செல்லும் விஜய்க்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என அக்கட்சியின் முக்கிய நிர்வாகி ஆதவ் அர்ஜுனா சார்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாமக்கல்லில் தமிழ்நாடு மாணவர் சங்கம் சார்பில் விஜய்க்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. அதில் 'தமிழக அரசே 39 அப்பாவி உயிர்களைப் பலி வாங்கிய தப்பி ஓடிய விஜய் என்ற அரசியல் தற்குறிகுறியை குற்றவாளி என கைது செய்' என்ற வாசகத்துடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.