நேற்று சென்னை மெரினா கடற்கரையில் உழைப்பாளர் சிலை அமைந்துள்ள பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்கள் காவல்துறையினரால் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்ட நிலையில் இன்று மாற்றுத்திறனாளிகளுக்கான பயிற்றுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் அவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மெரினா கடற்கரையில் உழைப்பாளர் சிலை அமைந்துள்ள பகுதியில் மாற்றுத்திறன் மாணவர்களுக்காக நியமிக்கப்பட்ட பயிற்றுநர்கள் சுமார் 100க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறன் மாணவர்களுக்காக ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறப்புப் பயிற்றுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தற்காலிகப் பணியாளர்களாக உள்ள நிலையில் மாத ஊதியம் பெற்று வருகின்றனர். இந்நிலையில் ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் அனுமதியின்றி ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட்டதாக அங்கு வந்த காவல்துறையினர் கைது செய்தனர். இதனால் அங்கு சற்று பரபரப்பு ஏற்பட்டது.