பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு ஜூலை 5ஆம் தேதி (05.07.2024) தனது வீட்டின் அருகே வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் சுமார் 30 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் 27 பேர் கைது செய்யப்பட்டனர். வழக்குப்பதிவு செய்யப்பட்ட சம்போ செந்தில் என்பவர் மட்டும் இதுவரை தலைமறைவாக உள்ளார். அதே சமயம் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட திருவேங்கடம் என்பவர் என்கவுண்டர் செய்யப்பட்டார். அதோடு கைது செய்யப்பட்ட 27 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

Advertisment

இத்தகைய சூழலில் தான் இந்த வழக்கு தொடர்பாக ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரர் சீனோஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார் அதில்,“இந்த வழக்கின் விசாரணையை மாநில அரசின் குற்றப்பிரிவு போலீசார் நடத்தினால் சரியாக இருக்காது என்பதால் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார். அதே சமயம் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவியும் தனியாக ஒரு வழக்கைத் தாக்கல் செய்திருந்தார். இதனையடுத்து இந்த வழக்கின் விசாரணையின் முடிவில் நீதிபதி அளித்த தீர்ப்பில், “இந்த வழக்கைப் பொறுத்தவரையில் கூடுதலான விசாரணை தேவைப்படும் என்பதால் சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்படுகிறது” என உத்தரவிட்டிருந்தார்

Advertisment

இதற்கிடையே நாகேந்திரன் கல்லீரல் பாதிப்பு காரணமாகச் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அதாவது கல்லீரல் மாற்றும் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுத் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நாகேந்திரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏ1 (A1) குற்றவாளியாகக் குறிப்பிடப்பட்டிருந்தார். இவர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது. முன்னதாக அதிமுக நிர்வாகி கொலை வழக்கில் கைதாகி ஆயுள் தண்டனை பெற்று வேலூர் சிறையில் இருந்து வந்ததும் கவனிக்கத்தக்கது. 

இந்நிலையில் மறைந்த நாகேந்திரன் இறுதிச்சடங்கில் பங்கேற்க அனுமதி கோரி அவரது மகன் அஸ்வத்தாமன் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவசர முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளார். அதன்படி இந்த வழக்கை விசாரித்த  நீதிமன்றம், நாகேந்திரனுக்கு இறுதிச் சடங்குகளைச் செய்ய அஸ்வத்தாமனுக்கு வரும் 13ஆம் தேதி வரை ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment