பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு ஜூலை 5ஆம் தேதி (05.07.2024) தனது வீட்டின் அருகே வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் சுமார் 30 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் 27 பேர் கைது செய்யப்பட்டனர். வழக்குப்பதிவு செய்யப்பட்ட சம்போ செந்தில் என்பவர் மட்டும் இதுவரை தலைமறைவாக உள்ளார். 

Advertisment

அதே சமயம் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட திருவேங்கடம் என்பவர் என்கவுண்டர் செய்யப்பட்டார். அதோடு கைது செய்யப்பட்ட 27 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இத்தகைய சூழலில் தான் இந்த வழக்கு தொடர்பாக ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரர் சீனோஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார் அதில்,“இந்த வழக்கின் விசாரணையை மாநில அரசின் குற்றப்பிரிவு போலீசார் நடத்தினால் சரியாக இருக்காது என்பதால் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார். அதே சமயம் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவியும் தனியாக ஒரு வழக்கைத் தாக்கல் செய்திருந்தார். 

அதில், “இந்த வழக்கில் தன்னையும் இணைத்துக் கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி வேல்முருகன் அமர்வில் விசாரணை நடைபெற்று வந்தது. இதனையடுத்து இந்த வழக்கின் விசாரணையில் நீதிபதி இன்று (24.09.2025) தீர்ப்பு வழங்கியுள்ளார். அதில், “இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கைப் பொறுத்தவரையில் கூடுதலான விசாரணை தேவைப்படும் என்பதால் சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படுகிறது. 

சி.பி.ஐ. அதிகாரிகள் 6 மாதத்தில் முதற்கட்ட குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்ய வேண்டும். அதோடு இந்த விசாரணையைப் பொறுத்தவரையில் அரசியல் மற்றும் மீடியா தலையீடு இல்லாமல் விசாரணை நடத்தப்பட வேண்டும். இந்த வழக்கு விசாரணையின் ஆவணங்களை மாநில காவல்துறையினர் உடனடியாக சிபிஐ அதிகாரிகளிடம் வழங்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

Advertisment