சமீப காலமாக, காவல்துறையில் உயர் அதிகாரிகள் சிலர் சக காவலர்களைத் திட்டி மிரட்டும் ஆடியோ மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, திருச்சியில் ஆயுதப்படை ஓட்டுநர் ரமேஷ் கொசுவலைப் பயன்படுத்தியதற்காக உயர் அதிகாரியால் திட்டப்பட்ட வீடியோ பேசுபொருளாக மாறியுள்ளது.
79-வது சுதந்திர தின விழா கடந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 15) நாடு முழுவதும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, திருச்சி சுப்பிரமணியபுரம் ஆயுதப்படை மைதானத்தில் சுதந்திர தின விழா நடைபெற்றது. இதற்கான பாதுகாப்புப் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், ஆகஸ்ட் 15 அதிகாலை பணியில் இருந்த ஆயுதப்படை (Armed Reserve - AR) ஓட்டுநர் ரமேஷ், கொசு அதிகமாக இருந்ததால் கொசுவலைப் பயன்படுத்தியிருக்கிறார். இதைப் பார்த்த உதவி ஆணையர் (ஏ.சி.) ஜான் கென்னடி, ரமேஷைத் திட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால், ரமேஷ் உயர் அதிகாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்தக் காட்சியை ஜான் கென்னடி தனது செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்தார்.
அப்போது, பணி நேரத்தில் கொசு வலையை பயன்படுத்தி ஏ.ஆர்.ஓட்டுநர் அமர்ந்து இருந்தார். அதை நீங்கள் பார்த்தீர்களா? அவர் என்ன செய்து கொண்டிருந்தார்? என அங்கு பணியில் இருந்த பெண் காவலர்களிடம் கேட்டார். “இங்கு நடந்த அனைத்தயும் கூறுங்கள்..” என்று ஆவேசமடைந்த ஓட்டுநர் ரமேஷ், ஒரு கட்டத்தில், “ நாங்கள் என்ன அடிமையா? எங்களை சாப்பீட்டீர்களா என்று ஒரு வார்த்தை கேட்டிருப்பீர்களா? இன்று சுதந்திர தினம் தானே, இன்றாவது எங்களை சுதந்திரமாக இருக்க விடுங்கள். எங்களை ஏன் அடிமையாகவே வைத்திருக்கிறீர்கள். நான் முறையாகத் தொப்பி, காலணி, சீருடை அணிந்து பணியில் இருக்கிறேன். கொசுவலைப் பயன்படுத்தியது தவறா?” என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், “என்னைப் பற்றி பேசுங்கள்; எதற்காக என் தாயையும் தந்தையையும் தவறாகப் பேசுகிறீர்கள்? இப்படி என்னை தவறாக சித்தரித்தால், நான் உங்கள் வேலையையும் காலி செய்வேன்” என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி, பலரது கவனத்தைப் பெற்றுவருகிறது
அரசுத் துறைகளில், மிகவும் சவாலான துறையாக காவல்துறை உள்ளது. இதில், குறிப்பாக கீழ்நிலைக் காவலர்கள் உயர் அதிகாரிகளால் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு ஆளாகின்றனர். உயர் அதிகாரிகளுக்கு கீழ்நிலைக் காவலர்கள் கட்டுப்படாதபோது, அவர்களுக்கு அதிக பணிச்சுமை வழங்கப்படுவது, நீண்ட நேரம் பணி செய்ய வைப்பது உள்ளிட்ட அதிகாரத் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். மேலும், ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு ஆகியவற்றில் காட்டப்படும் பாரபட்சம், காவலர்களை மேலும் மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறது. இதன் விளைவாக, அவர்களது மன அழுத்தமும் கோபமும் பொதுமக்கள் மீது திரும்புகிறது.
இந்தப் பிரச்சனைகளுக்கு தீர்வு காண, காவல்துறையில் சீர்திருத்தங்கள் அவசியம். குறிப்பாக, கீழ்நிலைக் காவலர்களின் பணிச்சுமையைக் குறைப்பது, மன அழுத்தத்தைத் தணிப்பதற்கு உரிய ஆலோசனைகள் மற்றும் பயிற்சிகள் வழங்குவது, மற்றும் அவர்களுக்கு உரிய மரியாதையும் அங்கீகாரமும் வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.