அரியலூரைச் சேர்ந்த பள்ளி மாணவி லாவண்யா. இவர் தஞ்சாவூர் மாவட்டம் மைக்கேல் பட்டியில் அமைந்துள்ள பள்ளி ஒன்றில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். இத்தகைய சூழலில் தான் கடந்த 2022ஆம் ஆண்டு மாணவி லாவண்யா தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து கட்டாய மதமாற்ற துன்புறுத்தலால் தான் மாணவி லாவண்யா தற்கொலை செய்து கொண்டதாக வி.எச்.பி. மற்றும் பா.ஜ.க. நிர்வாகிகள் குற்றம் சாட்டியிருந்தனர்.
அதே சமயம் மாணவின் மரணம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. விசாரணை கோரி மாணவியின் தந்தை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் சி.பி.ஐ. விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் மாணவி லாவண்யா வழக்கில், உயர்நீதிமன்ற கிளை உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் சி.பி.ஐ. பரபரப்பு அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. அதில், “லாவண்யா தற்கொலைக்கு மதமாற்ற முயற்சி காரணம் அல்ல. மாணவி படித்த பள்ளியில் எந்த ஒரு மத மாற்றமும் நடக்கவில்லை.
சம்பந்தப்பட்ட பள்ளியில் படித்து வெளியேறிய முன்னாள் மாணவர்களின் சான்றிதழ்களை ஆய்வு செய்ததில் யாரும் மதம் மாறவில்லை. வி.எச்.பி. நிர்வாகி முத்துவேல் மற்றும் பா.ஜ.க. தலைவர்களின் அழுத்தத்தின் காரணமாக மாணவி உடலை பெற மாணவியின் தந்தை மற்றும் மாணவியின் சித்தி ஆகியோர் மறுத்தனர். இதன் காரணமாக மாணவி உடலை வாங்காமல் இருப்பதற்காகப் பெற்றோர் தலைமறைவாக இருந்தனர். முத்துவேல் எடுத்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டுள்ளன.
இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட மாணவியின் அடையாளத்தை மறைக்காமல் வீடியோ எடுத்து வெளியிட்ட முத்துவேல் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மாணவி முதலில் பதிவு செய்த வீடியோவில் மதமாற்ற முயற்சி நடந்ததாக எதுவும் கூறவில்லை. விடுதிக் காப்பாளர் சகாயமேரி துன்புறுத்தல் குறித்தும், அதனால் மாணவியின் படிப்பு பாதிக்கப்பட்டது குறித்துமே மாணவி லாவன்யா வீடியோ வெளியிட்டுள்ளார். மாணவியின் மரணத்திற்கு காரணமான சகாய மேரி மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். மத மாற்ற முயற்சி நடந்ததாக எந்த வீடியோவிலும் ஒரு வார்த்தை கூட மாணவி பேசவில்லை” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow Us