திருப்பூர் காலேஜ் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் 40 வயதான ஸ்ரேயா. திருநங்கையான ஸ்ரேயா அந்தப் பகுதியில் உள்ள தனது வீட்டின் முன்புறம் பெட்டிக்கடை வைத்து நடத்தி வந்தார். இந்நிலையில், ஸ்ரேயா தனது பெட்டிக்கடையில் அரைகுறை ஆடைகளுடன் அமர்ந்திருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் எதிர்வீட்டில் வசித்து சலூன் கடை நடத்தி வந்த சுப்பிரமணியம் என்பவர், தன் வீட்டில் குழந்தைகளும் பெண்களும் இருப்பதால் “இப்படி அமர வேண்டாம்” என்று ஸ்ரேயாவிடம் அறிவுறுத்தியுள்ளார். இதனால் ஸ்ரேயாவுக்கும் சுப்பிரமணியின் குடும்பத்துக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

Advertisment

இதுதொடர்பான பிரச்சினையில் ஸ்ரேயா கடந்த சில நாட்களுக்கு முன்பு கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். போலீசார் அவரைக் காப்பாற்றிய நிலையில், மீண்டும் பெட்டிக்கடை வியாபாரத்தைத் தொடர்ந்தார். இந்நிலையில் கடந்த 6-ஆம் தேதி மீண்டும் ஸ்ரேயாவுக்கும் எதிர்வீட்டைச் சேர்ந்த சுப்பிரமணிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சுப்பிரமணியும் அவரது மகன் சரவணனும் சேர்ந்து ஸ்ரேயாவை சரமாரியாகத் தாக்கி கீழே தள்ளிவிட்டனர். ஸ்ரேயாவும் பதிலுக்கு தாக்கியதாகக் கூறப்படுகிறது.

Advertisment

இந்தத் தாக்குதலில் ஸ்ரேயாவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். அங்கு அவருகு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக ஸ்ரேயா உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்த போலீசார்,  சுப்பிரமணியம் (63), சரவணன் (39) ஆகியோரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

அரைகுறை ஆடைகளுடன் அமர்ந்திருந்ததாகக் கூறி திருநங்கை ஒருவரைத் தந்தை-மகன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் திருப்பூர் பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisment