Argument in the market street - Youths severely beaten Photograph: (police fir)
அரியலூரில் இளைஞர்கள் மீது நடந்த தாக்குதல் தொடர்பான முதல் தகவல் அறிக்கையின் வாக்குமூலம் வெளியாகியுள்ளது.
Advertisment
அரியலூரில் கடந்த 25 ஆம் தேதி இளைஞர்கள் மீது நடந்த தாக்குதல் தொடர்பாக தா.பழூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சையில் இருந்த கீழசிந்தாமணி கிராமத்தை சேர்ந்த பிரசாத்குமார் என்பவரிடம் வாக்குமூலம் பெற்றுள்ளார்.
Advertisment
அந்த வாக்கு மூலமானது, 'என் பெயர் பிரசாத் குமார் விவசாயக் கூலி வேலை செய்து கீழ சிந்தாமணி வடக்குத் தெருவில் குடும்பத்துடன் வசித்து வருகிறேன். 25/12/25 ஆம் தேதி இரவு 08:45 மணியளவில் நா.பழூர் கடைவீதி மெயின் ரோட்டில் உள்ள தில்ருஷ் எல்கட்ரிக்கல் கடையில் சாமான் வாங்க நானும் எனது சித்தப்பா மகன் மகேந்திரன் த/பெ மகாராஜன் என்பவரும் TN 61 D 7668 என்ற ஸ்பெலண்டர் இருசக்கர வாகனத்தில் வந்து திலருஷ் கடையின் முன்பு நிறுத்தி வண்டியில் நான் மட்டும் உட்கார்ந்திருக்க மகேந்திரன் கடைக்குள் சென்று சாமான் வாங்கிக்கொண்டு வந்தார். அப்போது எங்களுக்கு எதிரே அதே ரோட்டில் 3 கார்களில் பா.ம.க கட்சி கொடி கட்டியவர்கள் வந்து வண்டியை நிறுத்தி விட்டு அருகில் இருந்த அவர்களின் கட்சி ஆபீசுக்கு சென்று விட்டு திரும்பி வந்து ஹாரன் அடித்து நாங்கள் ரோட்டின் ஓரமாக நின்றிருந்த போதும் எங்களை நகரச் சொன்னார்கள். அப்பொழுது எங்களுக்கும் அவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அந்த சமயம் கீழசிந்தாமணியை சேர்ந்த தேவேந்திரன் என்பவரும் தா.பழூர் ஒன்றிய பா.ம.க செயலாளர் பனையடி கொளஞ்சியும் அங்கு வந்து எங்கள் ஜாதி பெயரை சொல்லியும் மேலும் சில தகாத வார்த்தைகளை சொல்லியும் ''இவனுங்க எல்லாம் சொன்னால் கேட்க மாட்டார்கள்'' என்றும் அவர்கள் கூட வந்த வக்கீல் பாலு, T.M.T.திருமாவளவன், பா.ம.க மாவட்ட செயலாளர் தமிழ்மறவன் ஆகியோர்களும் அவரை சார்ந்த மற்றும் சிலரும் எங்களை கீழே தள்ளிவிட்டு கைகளால் அடித்தும் கால்களால் உதைத்தும் கீழே தள்ளினார்கள். அதை தட்டிக்கேட்க வந்த எனது சித்தப்பா மகன் மகேந்திரனையும் மேற்கண்ட நபர்களும் சேர்ந்து பல முறை கைகளால் முகத்தில் குத்தியும் காலால் போட்டு மிதித்தார்கள்.
''இவனை வெளியில் வச்சு அடிக்காதிங்கடா காரின் உள்ளே வைத்து அடிங்கடா'' என்று வக்கீல் பாலு சொன்னார். அதன்படி என்னை மட்டும் காரின் சீட்டுக்கு இடையில் இழுத்து போட்டு தகாத வார்த்தையை சொல்லி நீதாண்டா காரணம் என்று அடித்தார்கள். பின்பு எங்கள் இருவரையும் அவர்கள் காவல் நிலையம் ரோட்டில் அனைவர் முன்னும் அடித்து இழுத்துச் சென்று காவல் நிலையத்தில் விட்டுவிட்டு அவர்கள் வந்த காரில் ஏறி சென்று விட்டார்கள். அவர்கள் தாக்கியதில் எனக்கு நெஞ்சு மற்றும் உடலில் பல பகுதிகளில் உள்காயம் ஏற்பட்டது. மகேந்திரனுக்கு முகத்தில் குத்தியதில் இடது பக்கம் வீங்கிய காயம் மற்றும் உடலில் பல பகுதிகளின் உள் காயமும் ஏற்பட்டது.
பின்பு எனது செல்போனை தேடிப்பார்த்தேன் காணவில்லை. எனக்கும் மகேந்திரனுக்கும் மயக்கம் வரவே அருகிலிருந்த எனது நண்பர்கள் உதவியுடன் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து எங்களை சேர்த்தார்கள். மகேந்திரன் தொடர்ந்து மயக்க நிலையில் பேசமுடியாமல் சிகிச்சையில் இருந்தபோது தா.பழூர் போலீசார் வந்து விசாரிக்க, நடந்ததை வாக்குமூலமாக சொல்லியுள்ளேன்'' என அந்த வாக்குமூலம் முடிகிறது.
அசல் முதல் தகவல் அறிக்கையுடன் குரல் வாக்குமூலத் தையும் இணைத்து மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதிக்கும், ஒரு நகலை வழக்கின் புலன் விசாரணை அதிகாரியை நியமிக்கும் பொருட்டு அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வாக்குமூலத்தை பதிவு செய்த உதவி ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
Follow Us