ஈரோடு பஸ் நிலையத்தில் வழக்கம் போல் இன்று (21.01.2026) காலைபயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. ஈரோடு பஸ் நிலையத்திற்குள் புறநகர் காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இதன் அருகே இன்று காலை தனியார் வாடகை கார் ஓட்டுநர் பயணியை ஏற்றிக்கொண்டு பஸ் நிலையத்திற்குள் வந்து இறக்கி விட்டார். அப்போது ஈரோடு பஸ் நிலையத்திற்குள் ஆட்டோ வைத்திருக்கும் ஓட்டுநர் பஸ் நிலையத்திற்குள் வரக்கூடாது என்று வாடகை கார் ஓட்டுநரிடம் கூறியுள்ளார்.
அப்போது வாடகை கார் ஓட்டுனருக்கும், ஆட்டோ டிரைவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதை அடுத்து ஆட்டோ டிரைவருக்கு ஆதரவாக சில ஆட்டோ டிரைவர்களும், வாடகை கார் ஓட்டுநருக்கு ஆதரவாக கார் ஓட்டுநர்களும் பஸ் நிலையத்துக்குள் திரண்டனர். இருதரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது இருதரப்பைச் சேர்ந்தவர்களும் மாறி மாறி ஒருவருக்கு ஒருவரை தாக்கி கொண்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
இது குறித்து தகவல் அறிந்ததும் ஈரோடு டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். ஒருவருக்கு ஒருவர் தாக்கிக் கொண்டதால் பஸ் ஏறும் பயணிகளும் அங்கு வந்தனர். இதை அடுத்து தாக்குதலில் ஈடுபட்ட ஆட்டோ டிரைவர் ஒருவர் மற்றும் வாடகை கார் ஓட்டுநர் ஒருவர் என இருவரையும் டவுன் போலீசார் விசாரணைக்காக போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இந்த சம்பவத்தால் பஸ் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
Follow Us