கோவை மாவட்டம் அவிநாசி சாலையில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை 10.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட்டது. இது தமிழ்நாட்டின் மிகப்பெரிய உயர்மட்ட மேம்பாலம் ஆகும். இந்த மேம்பாலத்திற்குக் கோவையைச் சேர்ந்த பொறியியல் அறிஞர் ஜி.டி. நாயுடுவின் பெயரைச் சூட்டுவதாகத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த 9ஆம் தேதி இந்த மேம்பாலத்தை மக்களின் பயன்பாட்டிற்காகத் தொடங்கி வைத்தார். அப்போது ஜி.டி. நாயுடுவின் மகன் ஜி.டி. கோபால், அமைச்சர்கள் எ.வ. வேலு, சு.முத்துசாமி, மு.பெ. சாமிநாதன் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
இந்த மேம்பாலத்தை திறந்து வைப்பதற்கு முந்தைய தேதியில், தமிழ்நாட்டில் உள்ள குடியிருப்புகள், தெருக்கள் ஆகியவற்றுக்கு வைக்கப்பட்டுள்ள சாதி பெயர்களை நீக்குவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. இந்த சூழ்நிலையில், அடுத்த நாளே கோவை மேம்பாலத்திற்கு நாயுடு என்று சமூக பெயர் வைத்து அதை திறந்து வைத்ததால் பெரும் சர்ச்சையானது. இதற்கு அரசியல் கட்சியினர் பலரும் கடும் விமர்சனத்தை வைத்து வருகின்றனர்.
இதற்கிடையில், அவினாசி சாலையில் அமைக்கப்பட்ட மேம்பாலத் திட்டத்தை அதிமுக ஆட்சியில் கொண்டு வந்தது 50 சதவீதம் நிறைவேற்றப்பட்டதாகவும், ஆட்சி மாற்றம் ஏற்பட்டு 1 வருடமாக கிடப்பில் போட்டு இப்போது திமுக அரசு திறந்திருப்பதாகவும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுகவினர் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில், கோவை மாநகராட்சி கூட்டத்தில் அவினாசி மேம்பாலத்தை யார் தொடக்கி வைத்தது என திமுக - அதிமுக கவுன்சிலர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. கோவை மாவட்டம் பாரம்பரிய விக்டோரிய ஹாலில் மாநகராட்சி மாமன்ற கூட்டம் இன்று (14-10-25) தொடங்கியது. கூட்டம் தொடங்கியவுடன் கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் மற்றும் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த கூட்டத்தில், கடந்த 9ஆம் தேதி 10.1 கி.மீ தொலைவிலான ஜிடி நாயுடு மேம்பாலத்தை திறந்து வைத்ததற்காக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஒரு தீர்மானம் வாசிக்கப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட அதிமுக கவுன்சிலர்கள் பிரபாகரன் உள்ளிட்டோர் இந்த பாலத்திற்கு நன்றி தெரிவிக்கும் போது முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என்று கூறினர். அதற்கு 5 சதவீதம் பணிகளை மட்டுமே நீங்கள் முடித்திருந்த நிலையில், 95 சதவீதம் பணிகளை திமுக அரசு தான் முடித்தது எனக் கூறி திமுக கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதற்கு அதிமுக கவுன்சிலர்கள், 55 சதவீதம் பணிகளை நாங்கள் ஏற்கெனவே முடித்து வைத்திருந்தோம் எனவும், மீதமுள்ள பணிகளை தான் நீங்கள் முடித்து திறந்திருக்கிறீர்கள் என குற்றம் சாட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், இரு தரப்பினருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதையடுத்து அதிமுக கவுன்சிலர்கள் கூச்சலிட்டவாறே கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.