'Are you talking obscenely... Fall on your feet' - Women chase Photograph: (cuddalore)
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இரண்டு பெண்களிடம் கஞ்சா போதையில் இளைஞர்கள் ஆபாசமாக பேசியதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட இளைஞர்களை விரட்டிச் சென்ற பெண்கள் அவர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தின் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை நகர்ப் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தன்னுடைய தோழியுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது அதே பகுதியில் நம்பர் பிளேட் கூட இல்லாத இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்கள் கஞ்சா போதையில் இருந்ததோடு சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்த பெண்களைப் பார்த்து ஆபாசமாக பேசியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண்கள் இருவரும் இளைஞர்களின் இருசக்கர வாகனத்தை விரட்டிச் சென்றுள்ளனர்.
பெண்கள் தன்னை விரட்டி வருவதை அறிந்து அந்த நபர்கள் வேகமாக இரு சக்கரத்தை இயக்கியும் விடாது அந்த பெண்கள் அவர்களை ஓவர் டேக் செய்து பிடிக்க முயன்றனர். அப்போது கீழத்தெரு மாரியம்மன் கோவில் பகுதியில் இரண்டு இளைஞர்களும் இருசக்கர வாகனத்தை கீழே விட்டுவிட்டு அங்கிருந்து தப்ப முயன்றுள்ளனர். அப்பொழுது மடக்கி பிடித்த பெண்கள் இருவரும் ''பெண்களை ஆபாசமாக பேசுவியா? பேசுவியா? காலில் விழு... காலில் விழு'' என கடுமையாகத் தாக்கினர்.
இந்த தாக்குதல் தொடர்பான காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இருவரும் பெண்களின் பிடியில் இருந்து தப்பிய நிலையில் உடனடியாக இரண்டு பெண்களும் இருசக்கர வாகனத்தில் சென்று சிதம்பரம் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இளைஞர்களின் வாகனத்தை பறிமுதல் செய்து போலீசார் இருவர் மீதும் ஆபாசமாக மிரட்டுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.
Follow Us