தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி (27.09.2025) கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். இதற்காக அதிகமான மக்கள் அங்குக் கூடியதால் கடும் நெரிசல், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் பலர் மயக்கமடைந்த நிலையில் 41 பேர் உயிரிழந்தனர். அதன் தொடர்ச்சியாக, இந்த சம்பவம் குறித்து வதந்தி பரப்பிய பாஜக நிர்வாகி சகாயம், த.வெ.க.வைச் சேர்ந்த சிவநேசன், சரத்குமார் என 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதற்கிடையே அசம்பாவிதம் நிகழும் என எச்சரித்த பிறகும் அதைக் கண்டுகொள்ளாமல் இருத்தல், கலவரத்தில் ஈடுபடுதல், தனியார் சொத்துக்கள் சேதம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் த.வெ.க.வினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் என். ஆனந்த், இணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல்குமார், கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக மதியழகன் மற்றும் நகரப் பொறுப்பாளர் பவுன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையே ஆனந்த் மற்றும் சி.டி.ஆர். நிர்மல் குமார் ஆகியோர் முன்ஜாமீன் கேட்டு மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
முன்னதாக என். ஆனந்த் மற்றும் சி.டி.ஆர். நிர்மல்குமார் ஆகியோரை பிடிப்பதற்காக ஏடிஎஸ்பி பிரேமானந்தன் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்நிலையில் கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக ஆனந்த், நிர்மல்குமார் ஆகியோரை கைது செய்ய 5 தனிப்படைகள் தீவிரம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், சென்னை, சேலம் மற்றும் ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களில் ஆனந்த் உள்ள ஏதாவது ஒரு இடத்தில் வைத்து கைது செய்ய தனிபடை தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருவதாக கூறபபடுகிறது. இது தொடர்பாக போலீசார் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆனந்த்தின் செல்போன் பயன்பாடு, உறவினர்கள் மற்றும் நெருக்கமான மாவட்ட செயலாளர்கள் தொடர்புடைய பகுதிகளில் தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். அதிலும் குறிப்பாக ஈரோடு மாவட்டத்தில் ஆனந்த் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் தனிப்படை போலீசார் அங்கு விரைந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.