மரபு சார்ந்த விழிப்புணர்வை அடுத்த தலைமுறையினரிடம் ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 19 முதல் 25 வரை உலக மரபு வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்தாண்டு, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையும், ராமநாதபுரம் சி.எஸ்.ஐ. கல்வியியல் கல்லூரியும் இணைந்து இரும்பு நாகரிகம் என்ற கருத்தரங்கத்தை நடத்தின. நிகழ்ச்சிக்கு கல்லூரித் தாளாளர் தேவ.மனோகரன் மார்ட்டின் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் முனைவர் ஆ.ஆனந்த் அனைவரையும் வரவேற்றார்.

Advertisment

சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு பேசியதாவது, “இரும்பு உருவாக்கம் தமிழ்நாட்டில் தான் நடந்தது என்பதை சிவகளை அகழாய்வு மூலம் தமிழ்நாடு தொல்லியல்துறை, அறிவியல் ரீதியாக உலகிற்கு நிரூபித்துள்ளது. சங்க இலக்கியங்களில் இரும்பு மற்றும் எஃகுத் தொழில் நுட்பம், அதன் பயன்பாடு பற்றிய செய்திகள் அதிகம் உள்ளன. பொன், இரும்பொன், கரும்பொன், கருந்தாது, இரும்பு, எஃகு, கொல்லன், கருமைக் கொல்லன், உலை, உலைக்கூடம், உலைக்கல், துருத்தி, விசைவாங்கி, விசைத்து வாங்கு துருத்தி, மிதியுலை, ஊது குருகு, குடம், குறடு, குறுக்கு  போன்ற தொழில்நுட்பக் கலைச் சொற்கள் சங்க காலத்திலேயே இரும்பை உருக்கி எஃகாக உருமாற்றும் தொழில் நுட்ப அறிவு இருந்ததற்கு சான்று பகர்கின்றன.

Advertisment

இரும்புத் தாதுவை கல் சுத்தியல் கொண்டு சிறியதாக உடைத்து ஊது உலையிலிட்டு உருக்கி இரும்பைப் பிரித்தெடுத்துள்ளனர். இதை உருக்க, 1200ºC வெப்பம் தேவை என்பதால் ஊது உலையில் அதிக அழுத்தத்துடன் காற்றைச் செலுத்த சிறிய துளைகள் கொண்ட சுடுமண் குழாய்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மதுரை முதல் கன்னியாகுமரி வரை உள்ள மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரங்களில் இயற்கையான இரும்புத் தாதுக்கள் கிடைக்கின்றன. பெருங்கற்கால நினைவுச் சின்னங்களும் இரும்பு உருக்கு உலையின் தடயங்களும் பல இடங்களில் இணைந்தே காணப்படுகின்றன. இரும்பு வணிகர், கொல்லர் பற்றிய குறிப்புகள் சங்க இலக்கியங்களிலும், தமிழி கல்வெட்டுகளிலும் உள்ளன.

மதுரை அழகர்கோயில் தமிழி கல்வெட்டில் கொழு வாணிகன் எளசந்தன் என்ற இரும்பு வணிகன் குறிப்பிடப்படுகிறான். சங்க இலக்கியங்களில் பூட்கொல்லன், பொற்கொல்லன், முடக்கொல்லன், கொல்லன்புல்லன், கொல்லன் வெண்ணாகன், பெருங்கொல்லன் என்ற பெயர்களிலும், இளந்தச்சன், பெருந்தச்சன் என்ற பெயர்களிலும் புலவர்கள் இருந்துள்ளனர். இக்கொல்லரும், தச்சரும் இன்றித் தமிழகத்தின் இரும்புக்காலம் வளம் பெற்றிருக்காது. இரும்பும், இறை வழிபாடும் வணிகத்துடன் இணைந்தே இருந்துள்ளன. நாகரிகம் வளர இரும்பு கண்டுபிடிப்புதான் மூலகாரணமாக இருந்தது” இவ்வாறு அவர் கூறினார்.

Advertisment

கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் சுகந்தி ஜெனிபா நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்டத் தொல்லியல் அலுவலர் சுரேஷ் செய்திருந்தார். அதன்பின் மாணவியர் ராமலிங்கவிலாசம் அரண்மனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அதன் அமைப்பு, ஓவியச் சிறப்புகள் பற்றி அவர்களுக்கு சொல்லப்பட்டு, அங்கிருந்த சேதுபதி மன்னர் கல்வெட்டை படியெடுக்கும் முறையும் கற்றுக்கொடுக்கப்பட்டது.