Archaeological Surveyor appeals School students should help find archaeological traces
பள்ளி மாணவர்கள் தங்கள் ஊரின் தொல்லியல் தடங்களைக் கண்டறிய உதவ வேண்டும் என ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு மாணவர்களைக் கேட்டுக் கொண்டார்.
விருதுநகர் மாவட்டம், நரிக்குடி ஒன்றியம், முத்தனேரி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், தொன்மைப் பாதுகாப்பு மன்றம் சார்பில் ‘தொல்லியல் அறிவோம்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. தலைமையாசிரியர் அன்புவேலன் தலைமை தாங்கினார். ஆங்கிலப் பட்டதாரி ஆசிரியர் ஜெயசீலன் அனைவரையும் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு, கண்மாய், ஏரி, ஏந்தல், ஓடை, ஆறு, குளம் போன்ற நீர்த்தேக்கங்களின் அமைப்பு, அவை உருவாக்கப்பட்டதன் நோக்கம், வரலாறு, மடை அமைப்பு, அதன் தொழில்நுட்பம் பற்றிக் கூறி, முத்தன் என்பவர் உருவாக்கிய ஏரியைச் சார்ந்து உருவான இவ்வூருக்கு முத்தனேரி எனப் பெயர் வந்ததாகக் கூறினார்.
பழைய, புதிய, நுண் கற்காலக் கருவிகள், கருப்பு சிவப்பு நிற பானை ஓடுகள், ரோமானிய, சீன நாட்டுப் பானை ஓடுகள், இரும்புத்தாதுக்கள், இரும்புக் கசடுகள், வட்டச் சில்லுகள், கூரை ஓடுகள், தக்களி, மான் கொம்புகள், பானைக் குறியீடுகள், நடுகல், சதிக்கல், நவகண்டம், சூலக்கல், திருவாழிக்கல், கல்வெட்டு எழுத்துகள், பொந்தன்புளி, உகாய் மரங்கள் பற்றி படங்கள் மூலம் விளக்கினார். தங்கள் ஊரில் உள்ள தொல்லியல் தடங்கள், கல்வெட்டுகள், சிற்பங்களைக் கண்டறிந்து ஆவணப்படுத்தவும் அவற்றைப் பாதுகாக்கவும் உதவ வேண்டும் என மாணவர்களை அவர் கேட்டுக் கொண்டார். அறிவியல் பட்டதாரி ஆசிரியர் நாகராணி நன்றி கூறினார்.
Follow Us