கோவையில் கடந்த 1998 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 11 இடங்களில் தொடர்ச்சியாக குண்டுகள்  வெடித்தது. இதில் 58 பேர் உயிரிழந்தனர். 250க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். அன்றைய காலகட்டத்தில் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த இந்த சம்பவம் தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டனர்.

156 பேர் கைது செய்யப்பட்டு அதில் 16 பேர் தற்போதுவரை சிறை தண்டனையை அனுபவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த சம்பவத்தில் முக்கியக் குற்றவாளிகளாக கருதப்பட்ட இரண்டு நபர்கள் தலைமறைவாக இருந்தனர். டைலர் ராஜா மற்றும் அபுபக்கர் என்ற இருவர் இந்த வழக்கில் பல ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தனர். தொடர்ந்து தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீசார் டெய்லர் ராஜா என்கிற சாதிக் ராஜாவை தேடி வந்த நிலையில் சாதிக் ராஜாவை கைது செய்து கோவை அழைத்து வந்துள்ளனர்.

சாதிக் ராஜாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்ட பின்னர் இது தொடர்பான முழுமையான விவரம் அறிக்கையாக சமர்ப்பிக்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. 1998 கோவை குண்டுவெடிப்பில் முக்கிய நபர் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில் கோவையில் அனைத்து காவல் நிலையங்களும் உஷார் படுத்தப்பட்டிருந்தது.

Advertisment
a4357
'Aram, Akhazhi' - Tamil Nadu DGP explains the arrest of three people Photograph: (police)

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவர் பேசுகையில், ''நீண்ட காலமாக தலைமறைவாக இருக்கும் குற்றவாளிகள் பிடிப்பதற்காக தமிழக காவல்துறையால் சிறப்பு ஆபரேஷன்கள் செயல்படுத்தப்பட்டு வந்தது. ஒன்று 'ஆபரேஷன் அறம்' மற்றொன்று 'ஆபரேஷன் அகழி' சில மாதங்களாகவே செயல்படுத்தப்பட்டு வந்தது. அதனுடைய ரிசல்ட் படி கோயம்புத்தூர் நகரக் காவல் துறையினர், ஆந்திரா, கர்நாடக போலீசார் சேர்ந்து நீண்ட நாட்களாக தலைமறைவாக இருந்த குற்றவாளிகளை கைது செய்துள்ளோம்.

Advertisment

இதில் ஒரு குற்றவாளி முப்பது வருடம் தலைமறைவாக இருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். இன்னொரு குற்றவாளி 26 வருடம் தலைமறைவாக இருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். இன்னொரு குற்றவாளி 29 வருடங்களுக்குப் பிறகு கைது செய்யப்பட்டுள்ளார். இதில் தொடர்புடைய குற்றவாளிகள் பெயர் அபுபக்கர் சித்திக். இவர் தமிழ்நாட்டில் ஐந்து வழக்குகளில் சம்பந்தப்பட்ட நபர். கர்நாடகாவில் 2013 ல் ஒரு வழக்கு, ஆந்திராவில் ஒரு வழக்கு உள்ளது. இரண்டாவது நபர் முகமது அலி வெடிகுண்டு சம்பவத்தில் கைது செய்திருக்கிறோம். மூன்றாவது நபர் டைலர் ராஜா. 1996-ல் இருந்து நான்கு வழக்குகளில் சம்பந்தப்பட்ட நபர். கர்நாடகாவில் விஜயபுரா மாவட்டத்தில் தலைமறைவாக இருந்த நிலையில் கைது செய்திருக்கிறோம். தீவிரவாத தடுப்பு படையினர் இதில் சிறப்பாக செயல்பட்டுள்ளனர்' என்றார்.