தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா ஊரடங்கு அமலில் இருந்தபோது ஜூன்19 ஆம் தேதி கடையை மூடாததால் செல்போன் கடை வைத்திருந்த தந்தை மற்றும் மகனான ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவரை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்று கொடூரமாக தாக்கியதில் உயிரிழந்தனர். அந்த நேரத்தில் இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. பல்வேறு அரசியல் கட்சிகளும் ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணத்திற்கு நீதி கேட்டு போராட்டங்களை நடத்தி இருந்தன.

இந்த சம்பவத்தில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உள்ளிட்ட ஒன்பது காவலர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்ட நிலையில் 2,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் தொடர்ந்து இந்த  வழக்கு விசாரணையானது நடைபெற்று வருகிறது.

a4504
'Approver's request; CBI opposes' - Another twist in the Sathankulam case Photograph: (thoothukudi)
Advertisment

இந்த சம்பவத்தில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் அப்ரூவராக மாறி 'நானே உண்மையைச் சொல்கிறேன்' என நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு ஜெயராஜ், பென்னிக்ஸ் மரண வழக்கில் புதிய பரபரப்பையும், திருப்பத்தையும் கொடுத்திருந்தது.

காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் அப்ரூவர் ஆவது குறித்த மனுவுக்கு சிபிஐ பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என மதுரை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி இன்று (24/07/2025) சிபிஐ தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் இன்ஸ்பெக்டராக இருந்த ஸ்ரீதர் அப்ரூவர் ஆவதற்கு சிபிஐ கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்நிலையில் கொலை செய்யப்பட்ட ஜெயராஜ், பென்னிக்ஸின் ரத்த உறவுகளிடம் இதுதொடர்பாக கருத்துக்களைக் கேட்டறிந்த பின்னரே ஸ்ரீதர் அப்ரூவர் ஆவதை ஏற்பதா அல்லது இல்லையா என்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என தெரிவித்த நீதிமன்றம், வழக்கை வரும் 28 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.